
சிட்னி, ஜன. 1- 2026 புத்தாண்டு பிறந்த கையோடு டி20 உலகக்கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியை அறிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால், இந்த முறை அந்த அணி எடுத்திருக்கும் சில முடிவுகள் கிரிக்கெட் விமர்சகர்களையே புருவம் உயர்த்த வைத்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள டி20 உலகக்கோப்பைக்கான இந்த அணியில் மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். அதன் பின்னணியில் முக்கிய திட்டமும் உள்ளது. பொதுவாக உடற்தகுதி இல்லாத வீரர்களைத் தொடருக்கு முன்பே கழட்டிவிடுவது வழக்கம். ஆனால், ஆஸ்திரேலியா இம்முறை ஒரு பெரிய ‘ரிஸ்க்’ எடுத்துள்ளது. அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களான பேட் கம்மின்ஸ் (முதுகு வலி), ஜோஷ் ஹேசல்வுட் (தசைப்பிடிப்பு) மற்றும் அதிரடி பினிஷர் டிம் டேவிட் ஆகிய மூவருமே காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக குணமடையவில்லை. இருந்தாலும், உலகக்கோப்பை தொடங்குவதற்குள் இவர்கள் தேறிவிடுவார்கள் என்ற நம்பிக்கையில் தேர்வுக்குழு இவர்களை அணியில் சேர்த்துள்ளது. “இவர்கள் மூவரும் நல்ல முன்னேற்றம் கண்டு வருகின்றனர். உலகக்கோப்பைக்குத் தயாராகிவிடுவார்கள்” என்று தேர்வுக்குழுத் தலைவர் ஜார்ஜ் பெய்லி அடித்துச் சொல்கிறார்.


















