இரண்டு மாதங்களில் 19 பேர் பலி; மதுவால் மயானமான ம.பி., கிராமம்

ஜபல்பூர்: ஜனவரி 3-
மத்திய பிரதேசத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மது அருந்தி கடந்த இரண்டு மாதங்களில் 19 பேர் பலியான நிலையில், மதுவை ஒழிக்க வலியுறுத்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உ ள்ளனர்.
ம.பி.,யின் ஜபல்பூரை ஒட்டிய புறநகர் பகுதியில் பாபா டோலா மற்றும் சிந்தி முகாம் அமைந்துள்ளது. இங்கு, பெரும்பாலும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
கிடைக்கும் தொழிலை செய்து வரும் அவர்களில் பலருக்கு படிப்பறிவு இல்லை என கூறப்படுகிறது. இங்குள்ள ஆண்களும், பெண்களும் வீட்டு வேலை செய்தும், கட்டட வேலை செய்தும் பிழைப்பு நடத்தி வருகின்றனர்.
மொத்தம் 2,000 பேர் வசிக்கும் இந்த பகுதியில், மதுபான கடைகளும் இயங்கி வருகின்றன. உரிமம் பெற்ற மதுபான கடைகளில் 100 ரூபாய்க்கு விற்கும் மது, சட்டவிரோதமாக 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
இதனால், இங்குள்ள இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாகினர். பெரியவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஏராளமானோர் மது குடிப்பதை வழக்கமாகவே வைத்துள்ளனர்.
கடந்த இரு மாதங்களில், மதுவுக்கு அடிமையாகி 19 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தில் தந்தை, மகன் உட்பட இரண்டு அல்லது மூன்று பேர் உயிரிழந்துள்ளதால், வாழ வழியின்றி பல குடும்பங்கள் நிர்க்கதியாகி உள்ளன.
இந்நிலையில், மதுவை ஒழிக்கவும், ஊரில் உள்ள மதுக்கடைகளை அகற்றவும் வலியுறுத்தி, பாபா டோலா மற்றும் சிந்தி முகாம் பகுதியில் வசிக் கும் பெண்கள் போராட்டத் தில் ஈடுபட்டு உள்ளனர்.
இறந்தவர்களின் புகைப்படங்களுடன் உள்ளூர் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தியதன் எதிரொலியாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு வீடாக சென்று, இறந்தவர்கள் குறித்த விபரங்களையும், இறந்ததற்கான காரணங்களையும் அவர்கள் பதிவு செய்து வருகின்றனர். பாபா டோலா மற்றும் சிந்தி முகாமில், மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்கள் நடத்தவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.