லாலு மீதான விசாரணைக்கு தடை விதிக்க முடியாது; ஐகோர்ட் திட்டவட்டம்

புதுடில்லி: ஜனவரி 6-
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் இரண்டு ஹோட்டல்களை, தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்டதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ், 77, மீதான விசாரணைக்கு தடை விதிக்க டில்லி உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான
லாலு பிரசாத் யாதவ், 2004 – 09 வரை, காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ரயில்வேயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, நிலத்தை லஞ்சமாக பெற்றதாக
அவர் மீது புகார் எழுந்தது. இது தொடர்பாக மத்திய விசாரணை அமைப்புகள் விசாரித்து வருகின்றன.இந்த கால கட்டத்தில், ஒடிஷாவின் புரி மற்றும் ஜார்க்கண்டின் ராஞ்சியில், ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு சொந்தமான இரண்டு ஹோட்டல்கள், பீஹாரைச் சேர்ந்த சுஜாதா ஹோட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டன. இதில் முறைகேடு நடந்ததாக, அமலாக்கத் துறை, சி.பி.ஐ., தனித்தனியாக வழக்குப் பதிந்துள்ளன.
இந்த வழக்கு டில்லியில் உள்ள விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், லாலு பிரசாத், அவரது மனைவி
ரப்ரி தேவி, அவரது மகன் தேஜஸ்வி யாதவ் உட்பட 11 பேர் மீது, கடந்த அக்., 13ல், சி.பி.ஐ., குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. இதை நீதிமன்றமும் ஏற்றது.