
பாங்காக்: ஜனவரி 7-
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ, அமெரிக்காவால் கைது செய்யப்பட்டதன் தாக்கம் உலக சந்தைகளில் மிதமாக எதிரொலித்திருக்கிறது. கச்சா எண்ணெய் விலை சரிவடைந்துள்ளது.
வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்தில், அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலை, ஒரு பேரல் 56.96 டாலராக குறைந்தது.
சர்வதேச தரத்திலான பிரென்ட் ரக கச்சா எண்ணெய் விலை, 34 சென்ட் குறைந்து 60.41 டாலராக இருந்தது. வெனிசுலாவின் தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி, 1990களில் கிட்டத்தட்ட 35 லட்சம் பேரல்களாக இருந்த நிலையில், தொடர் தடை விதிப்புகளால், தற்போது 11 லட்சம் டன் பேரல்களாக குறைந்து விட்டது.
மதுரோ கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, வெனிசுலா கச்சா எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா தலையிடும் என்ற டிரம்ப் அறிவிப்பால், உற்பத்தி அதிகரிக்கப்படும் என கருதப்படுகிறது. இதனால், கடந்த ஆறு மாதங்களாக தேவை அதிகரிக்காததால், கச்சா எண்ணெய் உற்பத்தி சமநிலையில் நீடித்தது. தற்போது அது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதி, அதன் சந்தை விலை சிறிது சரிவு கண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் அறிக்கைகளை அடுத்து, அமெரிக்க நிதி சந்தைகளில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு தங்கத்தின் விலை 2.70 சதவீதமும் வெள்ளியின் விலை 6.60 சதவீதமும் உயர்ந்துள்ளது. பாதுகாப்பான முதலீடு என்று முதலீட்டாளர்கள் கருதுவதால் தங்கம் உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்களில் விலை அதிகரித்துள்ளது. உக்ரைன், மத்திய கிழக்கு, கிழக்காசியா, அமெரிக்க – சீன வர்த்தக யுத்தம், பல்வேறு நாடுகளின் நிதிக்கொள்கைகளை பங்குச்சந்தை வல்லுநர்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர். அமெரிக்காவின் மத்திய வங்கி வெளியிட உள்ள அறிக்கை, சேவை துறை, நுகர்வோர் மனநிலை, வேலைவாய்ப்பு குறித்த அறிக்கைகள் அடுத்தடுத்து வெளியாக உள்ள நிலையில் அவற்றையும் எதிர்பார்த்து கொண்டுள்ளனர்.
















