புதுடெல்லி: ஜனவரி 8-
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்குப் பிறகு, 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் 6.5 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் பிஹாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அதற்கு முன்னதாக பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்ஐஆர்) நடைபெற்றன.
அதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அத்துடன் இண்டியா கூட்டணிக் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்தியில் ஆளும் பாஜக அரசுடன் தலைமை தேர்தல் ஆணையம் கூட்டு சேர்ந்து சதி செய்கிறது. வாக்கு திருட்டில் பாஜக ஈடுபடுகிறது என்று சரமாரியாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
மேலும், பத்திரிகையாளர்களைச் சந்தித்து, முந்தைய தேர்தல்களில் வாக்கு திருட்டு நடைபெற்றதாக கூறி ஆவணங்களை வெளியிட்டார்.
அவற்றை எல்லாம் தலைமை தேர்தல் ஆணையம் திட்டவட்டமாக மறுத்தது. அத்துடன், வாக்கு திருட்டு தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிடில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் ராகுல் காந்தி எந்த பதிலும் அளிக்கவில்லை. இந்நிலையில், 2-ம் கட்டமாக 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் கடந்த நவம்பர் 4-ம் தேதி தொடங்கியது.
தமிழ்நாடு, கேரளா, குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், சத்தீஸ்கர், கோவா ஆகிய மாநிலங்கள், புதுச்சேரி, அந்தமான் நிகோபார் தீவுகள், லட்சத்தீவுகள் ஆகிய யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் பணிகள் தொடங்கின.
பிஹாரை போலவே 2003-ம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த திருத்தப் பணிகளின் போது வங்கதேசம், மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சட்டவிரோத மாக குடியேறியவர்களை நீக்கு வதற்கு கவனம் செலுத்தப் பட்டது.
44.40 கோடி வாக்காளர்கள்: இந்த 9 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர் தொடங்குவதற்கு முன்பு மொத்தம் 50.90 கோடி வாக்காளர்கள் இருந்தனர்.
இந்நிலையில் தனித்தனி வரைவு வாக்காளர் பட்டியல்கள் வெளியிடப்பட்ட பிறகு இம்மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை 44.40 கோடியாக குறைந்துள்ளது. வரைவுப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்கள் ‘ASD’ (absent, shifted and dead/duplicate) அதாவது வராதவர்கள், இடம் மாறியவர்கள் மற்றும் இறந்தவர்கள் / இரட்டை பதிவுகள் என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.















