“இந்திய அணிக்கு விளையாட்டு உணர்வு இல்லை – பாகிஸ்தான் வீரர் ஷாகீன் அப்ரிடி சர்ச்சை பேச்சு

லாஹூர், ஜன. 9- “இந்திய அணி விளையாட்டு உணர்வை மதிப்பதில்லை. அவர்கள் செய்த அவமதிப்பிற்கு நாங்கள் கிரிக்கெட் களத்தில் தக்க பதிலடி கொடுப்போம்” என்று பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷாகீன் அப்ரிடி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.
2026 டி20 உலகக் கோப்பை நெருங்கும் வேளையில், அப்ரிடியின் இந்தப் பேச்சு இந்தியா – பாகிஸ்தான் மோதலில் இப்போதே அனலைக் கிளப்பியுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரின் போது, இந்திய அணி நடந்து கொண்ட விதம் சரியில்லை என்று ஷாகீன் அப்ரிடி குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவரான (PCB) மோஷின் நக்வியிடமிருந்து ஆசிய கோப்பையைப் பெற இந்திய அணி மறுத்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்துப் பேசிய ஷாகீன் அப்ரிடி, “எல்லைக்கு அப்பால் இருப்பவர்கள் விளையாட்டு உணர்வை மீறி நடந்து கொண்டனர்.
அவர்கள் செய்ததற்குக் களத்தில் நாங்கள் எங்கள் ஆட்டத்தின் மூலம் பதிலடி கொடுப்போம்” என்று சவால் விடுத்துள்ளார். பின்னணி என்ன?
இந்திய அணி அவ்வாறு நடந்து கொண்டதற்குக் காரணம் எல்லையில் நிலவும் பதற்றம்தான். கடந்த ஆண்டு பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே உறவு மிக மோசமாக உள்ளது. ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலேயே இந்திய வீரர்கள் பாகிஸ்தான் அதிகாரியிடமிருந்து கோப்பையை வாங்க மறுத்தனர். பிப்ரவரி 15-ல் மெகா மோதல் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் வரும் பிப்ரவரி 7-ம் தேதி தொடங்கவுள்ள டி20 உலகக் கோப்பையில் ஒரே பிரிவில் இடம்பெற்றுள்ளன. பிப்ரவரி 15, 2026 அன்று கொழும்பில் உள்ள பிரேமதாசா மைதானத்தில் இந்தியா – பாகிஸ்தான் டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற உள்ளது.