இந்தியாவில் நீர் பஞ்சத்தை உருவாக்கும் சீனா?

பெய்ஜிங்: ஜனவரி 9
வட இந்தியாவில் ஓடும் மிக முக்கிய நதிகளில் ஒன்று பிரம்மபுத்திரா. இந்த பிரம்மபுத்திரா நதி சீனாவின் திபெத்தில் உருவாகி இந்தியா வழியாக வங்கதேசம் சென்று கடலில் கலக்கிறது. இந்த நதியில் சீனா மிகப் பெரிய ஒரு நீர் மின் திட்டத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்.. இதன் பின்னணி குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்! சீனா யர்லுங் சாங்போ நதியில் மிகப் பெரிய ஒரு அணையைக் கட்டுகிறது. இதனால் இந்தியாவுக்குப் பாதிப்புகள் ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது. எங்கோ சீனா அணையைக் கட்டுவதற்கும் இந்தியாவுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி உங்களுக்கு வரலாம். இந்த யர்லுங் சாங்போ நதி தான் இந்தியாவில் பிரம்மபுத்திரா நதியாகப் பாய்கிறது.
சீனா கட்டும் நதி புனல் மின்சாரத்திற்காக யர்லுங் சாங்போ நதியில் சீனா கட்டும் இந்த அணை உலகின் மிகப் பெரிய கட்டுமான திட்டங்களில் ஒன்றாக இருக்கும். அதேநேரம் இதனால் இந்தியா மற்றும் அண்டை நாடுகளுக்கு, குறிப்பாகப் பிரம்மபுத்திரா படுகையில் உள்ள மக்களுக்குப் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. இந்த நதி திபெத்தில் இருந்து உருவாகி, இந்தியா வழியாக வங்கதேசத்திற்குச் செல்கிறது. இந்தப் பகுதியில் வாழும் பல கோடி மக்களுக்கு வாழ்வாதாரமாகத் திகழும் பிரம்மபுத்திரா நதி, விவசாயம், மீன்பிடித்தல் மற்றும் அன்றாட நீர்த் தேவைகளுக்கு ஆதாரமாக உள்ளது.
திட்டம் என்ன! இந்த நதியின் மேற்படுகையில் செய்யப்படும் இதுபோன்ற மாற்றங்கள், நதியின் இயற்கையான ஓட்டத்தை மாற்றக்கூடும் எனவும், அதன் விளைவுகள் இன்னும் முழுமையாக ஆராயப்படவில்லை எனவும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். $168 பில்லியன் மதிப்பில் கட்டப்படும் இந்தத் திட்டத்தின் கீழ், 2000 மீட்டர் செங்குத்தான உயரப் பள்ளத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கச் சீனா திட்டமிட்டுள்ளது. கிரீன் எனர்ஜிக்காக இதைத் திட்டமிட்டுள்ளதாகச் சீனா கூறினாலும், இதனால் பூர்வகுடி மக்களின் வாழ்விடங்கள் பாதிக்கப்பட்டும் என்றும், சுற்றுச்சூழலின் சமநிலையைச் சீர்குலையும் என்றும் எச்சரிக்கின்றனர்.