இந்தியா, சீனா மீது 500 சதவீத வரி- புதிய மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்

வாஷிங்டன், ஜன. 9- உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 4 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதாக உறுதியளித்து இருந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், பதவிக்கு வந்தவுடனே அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதற்காக ஒரு அமைதி திட்டத்தை உருவாக்கி உள்ள டிரம்ப், அதுகுறித்து ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளுடன் பேச ஸ்டீவ் விட்காப், தனது மருமகன் ஜேர்டு குஸ்னர் ஆகியோரை சிறப்பு தூதர்களாக நியமித்து உள்ளார். ஒருபுறம் அமைதி திட்டத்தை முன்வைத்து வரும் டிரம்ப், மறுபுறம் போரை நிறுத்த மறுக்கும் ரஷியாவை வழிக்கு கொண்டு வர மறைமுக அழுத்தமும் கொடுத்து வருகிறார். இதில் முக்கியமாக, உக்ரைனுடன் போரிட ரஷியாவிடம் பணம் இல்லாவிட்டால் போர் நின்றுவிடும் என்று அவர் கருதுகிறார். எனவே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளை தண்டிக்க அவர் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதன்படி ரஷியாவிடம் இருந்து இந்தியா மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்குவதை தடுப்பதற்காக இந்திய பொருட்கள் மீது கூடுதலாக 25 சதவீத வரி விதித்தார். இதன் தொடர்ச்சியாக, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் கைவிடுவதற்காக, அந்நாடுகள் மீது 500 சதவீத வரி விதிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.