
சேலம்: ஜனவரி 16-
திமுக ஆட்சியில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. இதனால் ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வந்துவிட்டு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளார்.. அப்போது புதிய ஓய்வூதியம் குறித்து எடப்பாடி சொல்லி உள்ள கருத்துக்கள், பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. ஒவ்வொரு பொங்கல் திருநாள் அன்றும், அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி ஒவ்வொரு தொகுதியாக சென்று பொங்கல் திருவிழாவில் கலந்து கொள்வது வழக்கம். அந்த வகையி நேற்றைய தினமும் சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் பொங்கல் திருவிழாவில் கலந்து கொண்டார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது திமுக அரசை கடுமையாக விமர்சித்து பேசினார்.. அப்போது “எங்கள் கூட்டணியில் அதிமுக, பாஜக, பாமக, இன்னும் சில கட்சிகள் சேரப்போகின்றன. இது வெற்றிக் கூட்டணி, நம் கூட்டணி வரும் தேர்தலில் ஆட்சியமைக்கும், அதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது. புதிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் அதிமுக உழைப்பாளர்கள் நிறைந்த கட்சி, தொண்டர்கள் நிறைந்த கட்சி. பாஜக 3-வது முறையாக நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு வலிமையான ஆட்சி மத்தியில் நடக்கிறது. பாமக முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி நம்மோடு இணைந்திருக்கிறார். வலிமையான கட்சிகள் ஒன்று சேர்ந்து தேர்தலை சந்திக்க இருக்கிறோம். காங்கிரஸ், திமுக கூட்டணியில் இருக்கிறதா வெளியேறுகிறதா என தெரியவில்லை.அதிமுக தலைமையில் பலம் பொருந்திய கூட்டணி அமைக்கப்பட்டுவிட்டது. திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கிற காங்கிரஸ் கை நழுவி போகப்போகிறது, திமுக கூட்டணியில் காங்கிரஸ் நிலைக்குமா என்ற கேள்வி வந்துவிட்டது, அதிமுகவை பொறுத்தவரை பலம் வாய்ந்த கூட்டணி. தேர்தல் நேரத்தில் திமுகவை வீழ்த்துவோம். எங்களது கூட்டணி வலிமையான கூட்டணி. சில கட்சிகள் வரும், இவற்றையெல்லாம் பகிரங்கமாக கூற முடியாது.திறமையற்ற முதல்வர் இருக்கிற காரணத்தினால் மக்கள் நிம்மதியாக இல்லை. அரசு பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள், பகுதி நேர ஆசிரியர்கள், செவிலியர்கள் ஆகியோரின் போராட்டங்கள் இல்லாத நாளே இல்லை. ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிக்கிற நிலை வந்துவிட்டது. விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் அதிமுக ஆட்சியில் 2 முறை தள்ளுபடி செய்யப்பட்டது. 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் கொடுக்கப்பட்டது, விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளைச் செய்தோம், இந்த ஆட்சியில் விவசாயிகளுக்கு முறையாக கடன் கிடைப்பதில்லை. நமது ஆட்சியில் வறட்சி நிவாரணம் கொடுத்தோம், இழப்பீடு தொகை கொடுத்தோம்.

















