அடம் பிடிக்கும் வங்கதேசம் .. கைவிட்ட பாகிஸ்தான்

டாக்கா, ஜன. 21- இந்தியாவில் நடைபெறவுள்ள 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேச அணி பங்கேற்குமா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. பாதுகாப்பு காரணங்களைக் காட்டி தங்கள் போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு நாட்டிற்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேசம் பிடிவாதம் பிடித்து வருகிறது. ஆனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இதற்கு மறுப்பு தெரிவித்து, வங்கதேசத்திற்கு ஒரு இறுதி எச்சரிக்கையை விடுத்திருந்தது. அந்த கெடு இன்றுடன் (ஜனவரி 21) முடிவடைகிறது. 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்பது குறித்து ஜனவரி 21ஆம் தேதிக்குள் (இன்று) இறுதி முடிவை அறிவிக்க வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு ஐசிசி உத்தரவிட்டிருந்தது. ஒருவேளை இந்தியா வந்து விளையாட சம்மதிக்கவில்லை என்றால், வங்கதேச அணிக்கு பதிலாக தரவரிசை அடிப்படையில் ஸ்காட்லாந்து அணிக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஐசிசி எச்சரித்திருந்தது. வங்கதேசத்தின் ஆவேச பதில் ஐசிசியியின் இந்த கெடுவுக்கு வங்கதேச இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை ஆலோசகர் ஆசிப் நஸ்ருல் காட்டமாக பதிலளித்துள்ளார். அவர் கூறுகையில், “நியாயமற்ற மற்றும் யதார்த்தமற்ற அழுத்தங்களுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அழுத்தத்திற்கு ஐசிசி பணிந்து, எங்கள் மீது நிர்பந்தம் திணித்தால் அதை ஏற்க முடியாது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுக்கும்போது ஐசிசி இடத்தை மாற்றுகிறது. நாங்கள் தர்க்கரீதியான காரணத்திற்காகவே இடமாற்றம் கேட்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். வங்கதேசத்திற்கு ஆதரவாக பாகிஸ்தான் அணியும் உலகக்கோப்பையை புறக்கணிக்கும் என்று செய்திகள் வெளியாகின. ஆனால், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அத்தகைய முடிவை எடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு இலங்கையில் போட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளதால், அவர்கள் உலகக்கோப்பையை புறக்கணிக்க வாய்ப்பில்லை. இதனால் இந்த விவகாரத்தில் வங்கதேசம் தனித்து விடப்பட்டுள்ளது.