உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்பை நடத்த இந்தியா முயற்சி

புவனேஸ்வர், ஜன. 21- சர்வதேச அளவில் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் இந்தியா சமீபகாலமாக அதிக ஆர்வம் காட்டி வருகிறது. அந்த வகையில், 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலக உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியை (World Indoor Athletics Championships) நடத்துவதற்கான உரிமையைக் கோரி இந்தியா விண்ணப்பித்துள்ளது. இதற்கான முயற்சியை இந்திய தடகள சம்மேளனம் தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும் பட்சத்தில்,
ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வர் நகரில் போட்டிகள் நடத்தப்படும். அங்குள்ள கலிங்கா விளையாட்டு வளாகத்தில் அமைந்துள்ள உள்ளரங்க தடகள மைதானம் இதற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் தடகள போட்டிகளுக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்ட ஒரே உள்ளரங்க மைதானம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 2024 ஆம் ஆண்டிலேயே நியூசிலாந்து நாடு 2028 உலக சாம்பியன்ஷிப் தொடரை நடத்த விருப்பம் தெரிவித்திருந்தது. இதனால் போட்டியை நடத்தும் உரிமையைப் பெற இந்தியா, நியூசிலாந்துடன் கடும் போட்டியைச் சந்திக்க நேரிடும். 2028 ஆம் ஆண்டு ஆசிய உள்ளரங்க சாம்பியன்ஷிப் போட்டியையும் இதே மைதானத்தில் நடத்த இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், மைதானத்தின் தரம் மற்றும் வசதிகளை ஆய்வு செய்வதற்காக உலக தடகள அமைப்பின் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை இரவு இந்தியா வந்தடைந்தனர்.
அவர்கள் இன்று (புதன்கிழமை) கலிங்கா மைதானத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர். உலகளாவிய போட்டிகளுக்கு முன்னதாக, இந்தியாவின் முதல் தேசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி இதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. வரும் மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்தத் தொடர், மைதானத்தின் செயல்பாட்டைப் பரிசோதிக்க ஒரு முன்னோட்டமாக அமையும். கலிங்கா உள்ளரங்க மைதானத்திற்கு அருகில் உள்ள பல்நோக்கு மைதானத்தில்,
வரும் ஆகஸ்ட் மாதம் வெள்ளி அளவிலான கான்டினென்டல் டூர் (Continental Tour) போட்டிகள் நடைபெறவுள்ளன. கடந்த ஆண்டு வெண்கல அளவிலான போட்டிகளை வெற்றிகரமாக நடத்தியதைத் தொடர்ந்து, இம்முறை அடுத்தகட்ட போட்டிகள் நடைபெறவுள்ளது.
மேலும், டெல்லி ஜவஹர்லால் நேரு மைதானத்தில் ஆசிய ரிலே போட்டிகளை நடத்தவும் இந்திய தடகள சம்மேளனம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகத்தரம் வாய்ந்த உள்ளரங்க தடகளப் போட்டியை இந்தியா நடத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.