
விசாகப்பட்டினம், ஜன. 28- இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான 4-வது டி20 கிரிக்கெட் போட்டி விசகாப்பட்டினத்தில் உள்ள டாக்டர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி ஏசிஏ-விடிசிஏ மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் நாக்பூரில் நடைபெற்ற முதல் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்திலும், ராய்ப்பூரில் நடைபெற்ற 2-வது ஆட்டத்தில் 7 விக்கெட்கள் வித்தியாசத்திலும், குவாஹாட்டியில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் 8 விக்கெட்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் தொடரை 3-0 என இந்திய அணி தன்வசப்படுத்தியிருந்தது. இந்நிலையில் 4-வது ஆட்டம் விசாகப்பட்டினத்தில் இன்று இரவு நடைபெறுகிறது. 3-வது போட்டியில் 154 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 10 ஓவர்களில் வெற்றி கண்டிருந்தது. தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 20 பந்துகளில், 68 ரன்களை விளாசி மிரட்டினார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளில் 56 ரன்கள் விளாசியிருந்தார். இஷான் கிஷனும் தனது பங்குக்கு 13 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்திருந்தார். இவர்களிடம் இருந்து மேலும் ஒரு சிறந்த செயல்திறன் வெளிப்படக்கூடும். அதேவேளையில் தொடக்க வீரரான சஞ்சு சாம்சன் நடப்பு தொடரில் இதுவரை பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. அவர் முறையே 10, 6, 0 ரன்களில் ஆட்டமிழந்து இருந்தார். டி 20 உலகக் கோப்பை நெருங்கி வருவதால் அவரது பார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளது. தற்போது நியூஸிலாந்துக்கு எதிரான தொடரை வென்றுவிட்டதால் இன்றைய ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் எந்தவித நெருக்கடியும் இல்லாமல் விளையாட முடியும். இதனால் அவர், பார்முக்கு திரும்புவதற்கு இன்றைய ஆட்டத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும். இதுஒருபுறம் இருக்க இந்திய அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் நடப்பு தொடரில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாதது சுணக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


















