
கொழும்பு, ஜன. 29- வங்கதேசத்திற்கு ஆதரவாக 2026 டி20 உலகக்கோப்பையைப் புறக்கணிப்போம் என்று மார்தட்டிய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், தற்போது சத்தமில்லாமல் உலகக்கோப்பைத் தொடரில் பங்கேற்கத் தயாராகிவிட்டது. இந்தியா வர மறுத்த வங்கதேசம் தொடரிலிருந்து நீக்கப்பட்ட நிலையில், தானும் அந்த வலையில் சிக்க விரும்பாத பாகிஸ்தான், இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தான் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, உலகக்கோப்பையைப் புறக்கணிப்பது குறித்துப் பரிசீலிப்போம் என்று கூறியிருந்தது வெறும் நாடகம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்கக் கொழும்பு செல்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணியுடன் இணைந்து ஒரே விமானத்தில் பாகிஸ்தான் அணியும் இலங்கை செல்லத் திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. பிரதமர் கொடுத்த அட்வைஸ் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி, அந்நாட்டுப் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது பிரதமர், “வங்கதேசத்திற்கு நாம் ஆதரவு தெரிவிக்கலாம். ஆனால் அதற்காக உலகக்கோப்பையைப் புறக்கணிப்பது புத்திசாலித்தனம் அல்ல. தொடரைப் புறக்கணித்தால் ஏற்படும் பொருளாதார இழப்பை நம்மால் தாங்க முடியாது. எனவே அணியை விளையாட அனுப்புவதே சிறந்தது” என்று அறிவுறுத்தியுள்ளார். பிரதமர் மட்டுமல்லாமல், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, ராணுவ உயரதிகாரிகள் மற்றும் முன்னாள் கிரிக்கெட் வாரியத் தலைவர்களான நஜாம் சேத்தி, ரமீஸ் ராஜா ஆகியோரும் உலகக்கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்றே வலியுறுத்தியுள்ளனர். குறிப்பாக, இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்கக் கூடாது என்றும், அப்படிச் செய்தால் ஐசிசி மூலம் கிடைக்கும் வருவாய் மற்றும் நஷ்ட ஈடு பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படும் ($38 மில்லியன் – ரூ.315 கோடி வரை இழப்பு ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது) என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனால் பிப்ரவரி 15 அன்று கொழும்பில் நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான லீக் போட்டியில் பாகிஸ்தான் விளையாடுவது உறுதியாகியுள்ளது.



















