சென்னை: ஜனவரி 31-
அரசியல் கட்சிகளின் ரோடு-ஷோ, பொதுக்கூட்டங்களை முறைப்படுத்த தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்து புதிய நெறிமுறைகளை வகுக்கக் கோரி தவெக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கரூரில் கடந்த 2025 செப்.27-ம் தேதி தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து, உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, அரசியல் கட்சிகளின் ரோடு-ஷோ, பொதுக்கூட்டங்கள், பேரணிகளை நடத்துவது தொடர்பான நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து தமிழக அரசு கடந்த ஜன.5-ம் தேதி அரசிதழில் வெளியிட்டது.
இந்நிலையில், இந்த வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக் கோரி தவெக இணை பொதுச் செயலாளர் சிடிஆர். நிர்மல்குமார் சார்பில் தவெக வழக்கறிஞர் அணி மாநிலத் தலைவர் எஸ்.அறிவழகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில் கூறியுள்ளதாவது:
அரசியல் கட்சிகளின் ரோடு ஷோக்களுக்கு அனுமதி கோருவதில், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கும் வகையில் நெறிமுறைகளை உருவாக்கி உள்ளனர். இதனால், பதிவு செய்து இன்னும் அங்கீகாரம் பெறாத கட்சிகள் பாதிக்கப்படும். மேலும், அதில் உள்ள பல நிபந்தனைகள் நடைமுறை சாத்தியமற்றதாக, பின்பற்ற முடியாததாக உள்ளன. இதனால், கட்சி நிகழ்வுகளுக்கு அனுமதி பெற முடியாத நிலை உருவாகும்.
















