
அமராவதி: பிப்ரவரி 2 –
ஆந்திராவில் ஒய்ஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்களின் இல்லத்தைக் குறிவைத்து நேற்று தாக்குதல்கள் நடந்துள்ளன. குறிப்பாக முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷின் இல்லம் தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. இந்தத் தாக்குதலை அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி கண்டித்துள்ளார். இந்தத் தாக்குதல்களால் அங்குப் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திராவில் இப்போது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம்- பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. அங்கு எதிர்க்கட்சியாக ஜெகன்மோகன் ரெட்டி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் இருக்கிறது. இதற்கிடையே ஆந்திராவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பல ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர்கள் மீது அடுத்தடுத்து வன்முறைத் தாக்குதல்கள் நடந்துள்ளன.
விஜயவாடாவில் முன்னாள் அமைச்சர் ஜோகி ரமேஷின் இல்லம் தாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டது. அதேபோல முன்னாள் அமைச்சர் அம்பதி ராம்பாபு இல்லத்தின் மீதும் அங்குத் தாக்குதல்கள் நடந்தன. இப்ராஹிம்பட்னத்தில் உள்ள ஜோகி ரமேஷின் இல்லத்தை முற்றுகையிட்ட பல நூறு தெலுங்கு தேசம் கட்சியினர் அங்குத் தாக்குதல் நடத்தியதாகச் சொல்லப்படுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “பெரிய கும்பல் திடீரென உள்ளே புகுந்து வீட்டைச் சூறையாடியது. வீட்டுப் பொருட்களைச் சேதப்படுத்தியது. வீட்டிற்குத் தீயும் வைத்தது. இதனால் அங்குப் பீதி ஏற்பட்டது.. இதைப் பார்க்கும்போது திட்டமிடப்பட்ட தாக்குதல் போலவே தெரிகிறது. மாஜி அமைச்சர்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இது கிட்டத்தட்ட அரசியல் அச்சுறுத்தல் போலவே மாறியுள்ளது” என்றனர்.
உள்ளூர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவரான ஜோகி ரமேஷ் மீது குறிவைத்துத் தாக்குதல் நடந்துள்ளது. இவர் அப்பகுதியில் பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் உள்ள பிரபலமாக இருக்கும் தலைவர் ஆவார். இதுபோல எதிர்க்கட்சித் தலைவர்கள் குடியிருப்புகளில் தெலுங்கு தேசம் தொண்டர்கள் தொடர் தாக்குதலால் பதற்றம் அதிகரித்துள்ளது. முன்னாள் அமைச்சர் அம்பதி ராம்பாபுவின் இல்லத்தில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து அவரது வீட்டில் காவல்துறை பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், “சனிக்கிழமை இரவு அவரது இல்லத்தையும் அலுவலகத்தையும் ஏராளமான தொண்டர்கள் சேதப்படுத்தினர். வாகனங்களைச் சூறையாடி, சிலவற்றைத் தீ வைத்தனர். உடனடியாகச் சம்பவ இடத்திற்கு வந்து தேவையான நடவடிக்கைகள் எடுத்தோம். இப்போது நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது” என்றார். பின்னணி கடந்த சனிக்கிழமை இரவு விகாஸ் நகரில் உள்ள அம்பதி ராம்பாபுவின் அலுவலகத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் வன்முறைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர முதல்வரும் தெலுங்கு தேசம் தலைவருமான முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குறித்து ராம்பாபு அவதூறாகப் பேசியதாகத் தகவல் வெளியான நிலையில், அதைத் தொடர்ந்தே இந்த தாக்குதல்களும் போராட்டங்களும் நடந்துள்ளன. ராம்பாபுவின் அலுவலகம் மற்றும் அவரது இல்லத்தை முற்றுகையிட்ட தெலுங்கு தேசம் கட்சியினர், கற்களை வீசியெறிந்தும், உருட்டுக் கட்டைகளைக் கொண்டும் தாக்கினர். அம்பதி ராம்பாபு உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தெலுங்கு தேசம் தொண்டர்கள் வலியுறுத்தினர். மன்னிப்பு கேட்கத் தவறினால், அவர் மீது வழக்குப் பதிவு செய்யக் காவல்துறைக்கு அழுத்தம் கொடுப்போம் என்றும் எச்சரித்தனர்.. அதேபோல முன்னாள் அமைச்சர் விததாலா ரஜினி இல்லத்திலும் தாக்குதல் நடந்துள்ளது.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து விததாலா ரஜினி, ஜோகி ரமேஷ் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசிய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டி, அவர்களுக்குத் தைரியம் கொடுத்தார். மேலும், கட்சியின் முழு ஆதரவையும் அவர்களுக்கு இருக்கும் என்றும் தெரிவித்தார்.
















