
டெல்லி : பிப்ரவரி 2 –
தென்பெண்ணையாறு நீர் பங்கீடு விவகாரத்தில் தீர்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
ஒரு மாதத்தில் தீர்ப்பாயம் அமைப்பது குறித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் அமைத்தது குறித்து அதிகாரபூர்வமாக அரசிதழில் ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என்றும் பெண்ணையாறு நடுவர் மன்றம் அமைக்க கோரி தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கில் உச்சநீதிமன்றம்
ஆணையிட்டுள்ளது.
நீதிபதிகள் விக்ரம் நாத், என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரித்த நிலையில், விசாரணை நிறைவடைந்ததால் இன்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். அதில் நதி நீர் பிரச்சினை தீர்க்க தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஒரு மாதத்திற்குள் தீர்பாயத்தை அமைக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பாயம் அமைக்கப்பட்டவுடன் அது குறித்து அரசிதழில் வெளியிடுமாறு உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம், சிக்கபள்ளாபூர் மாவட்டம், நந்தி மலையில் உருவாகும் இந்த ஆறு, கர்நாடகாவில் தொடங்கி தமிழ்நாட்டில் (கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வழியாக) பாய்கிறது.















