
டெல்லி: பிப்ரவரி 4
தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட்ட காசியாபாத்தில் ஆன்லைன் கேமிற்கு அடிமையான சிறுமிகளைப் பெற்றோர்கள் கண்டித்துள்ளனர். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத சகோதரிகள் மூன்று பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் கேம் விளையாட்டைக் கண்டித்ததால் நள்ளிரவில் மாடியில் இருந்து குதித்து இவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காலத்தில் குழந்தைகள் சின்ன சின்ன விஷயத்திற்குக் கூட மோசமான முடிவுகளை எடுத்துவிடுகிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் துணிச்சலாக இருந்தாலும் சில குழந்தைகள் சட்டென விபரீத முடிவை எடுத்துவிடுகிறார்கள். அப்படியொரு மோசமான சம்பவம் தான் தேசிய தலைநகர் பகுதிக்கு உட்பட்ட காசியாபாத்தில் நடந்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் இருந்து சிறுமிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அவர்கள் குடியிருப்பின் 9வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அந்தச் சிறுமிகள் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான நிலையில், பெற்றோர் அவர்களைக் கண்டித்துள்ளனர். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத அந்த மூன்று சிறுமிகளும் லெட்டர் எழுதி வைத்துவிட்டு மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டனர். இதில் உயிரிழந்த சிறுமிகள் 12 வயது பாக்கி, 14 வயது பிராச்சி, 16 வயது விஷிகா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தச் சகோதரிகள் மூன்று பேருமே ஒன்றாகவே வளர்ந்துள்ளனர். எழுந்து ரெடி ஆவது, பள்ளி செல்வது உட்பட அனைத்து அன்றாடச் செயல்களையும் ஒன்றாகவே செய்தனர்.
















