“தமிழ்… பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது!” – கமல்ஹாசன் பேச்சு

புதுடெல்லி, பிப்ரவரி 5- “இன்று தமிழை, தமிழரைப் பார்த்து பிச்சை எடுக்கக்கூட தமிழ் உதவாது என்கிறீர்கள். ஓரளவு உண்மைதான். தமக்கென உங்கள் நிதியை திரட்ட ஆங்கிலத்தில், இந்தியில் பிச்சை எடுக்கலாமே! தமிழ்… பிச்சை எடுக்க உதவாது, திருடவும் உதவாது” என்று மாநிலங்களவையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் எம்.பி. பேசினார். இன்று மாநிலங்களவையில் முதன்முறையாக கமல்ஹாசன் பேசினார். ஆங்கிலத்தில் உரையாற்றிய அவர், “இங்கு வரமுடியாமல் போன எம் தமிழர் தலைவர்களுக்கும், என் நண்பர் ஸ்டாலினுக்கும் நன்றி. இந்த அவையில் ஓர் உறுப்பினராக நின்று பேசுவதை நான் பெரும் கவுரவமாகக் கருதுகிறேன். சினிமா எனும் ஊடகத்தின் வழியாகப் பயணம் செய்து, தமிழகத்தின் பரமக்குடி எனும் ஒரு சிறிய ஊரிலிருந்து புறப்பட்டு வந்தவன் நான். இந்தியா என்பது மாநிலங்களால் இணைந்த ஒரு நாடு. அதுதான் இந்திய அரசியல் சாசனமும் வகுத்துக் கொடுத்திருக்கிறது. இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம் என்பதை மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும். நான் எனது மொழியை எனது ஆசிரியர்கள் வாயிலாக கற்றுக் கொண்டேன். எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய எனது ஆசிரியர்களில் ஒருவர்தான் தமிழகத்தின் முன்னாள் முதல்வர் அண்ணா.
எனக்குத் தமிழை அறிமுகப்படுத்திய ஆசிரியர்களில் ஒருவர் அரசியல் தலைவர் சி.என்.அண்ணாதுரை. ‘துரை’ (Durai) என்றால் பிரெஞ்சு மொழியில் அரசன் என்று பொருள். அவர் அரசராகப் பிறக்கவில்லை, ஆனால் தமிழர்களாகிய நாங்கள் அவரை எங்கள் மனங்களில் அரசராக அரியணையில் ஏற்றினோம். எமது மொழி, கலாசாரம் மற்றும் உரிமைகள் மீதான எந்தவொரு ஆக்கிரமிப்பையும் எப்படி எதிர்கொள்வது என்று அவர் எங்களுக்குக் கற்றுக்கொடுத்தார். 57 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நான் உங்கள் முன்னால் பேசுகிறேன். 1969 பிப்ரவரி 3-ம் தேதி அவர் மறைந்த தினம். எனது சித்தாந்தத்தின் தந்தைகளில் ஒருவரை இழந்த நான் அப்போது 14 வயது சிறுவன். இன்று அவர் பேசிய அதே அவையில் நான் பேசுகிறேன். இது மேடை அச்சம் அல்ல, உணர்ச்சிகளால் நான் நடுங்குகிறேன். எனக்குள் இருக்கும் உணர்ச்சிப் பெருக்கெடுத்து உங்களைத் புண்படுத்திவிடக் கூடாது என்பதற்காகவே நான் இதையெல்லாம் எழுதி வைத்திருக்கிறேன். இன்று அண்ணாவின் மகனாகவும், காந்தி மற்றும் பெரியாரின் கொள்ளுப் பேரனாகவும் உங்கள் முன் நிற்கிறேன். இந்த உரையை ஒரு துளி கோபமும் இல்லாமல் எழுதுவதற்கு மகாத்மா காந்தி எனக்கு உதவினார். தர்க்க ரீதியான வாதங்களை முன்வைக்க தந்தை பெரியார் எனக்கு உதவினார். இந்த மாபெரும் ஜனநாயகக் கட்டிடத்தின் மாண்பைப் புரிந்து கொள்ள அண்ணா எனக்கு உதவினார்.