
சென்னை: பிப்ரவரி 16-
அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் வரும் 20 ஆம் தேதி முதல் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலை நிலவி வருகிறது. சென்னை உள்பட வட மாவட்டங்களில் வழக்கத்தை விட பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இன்று அதிகாலையிலும் பனியின் தாக்கம் சென்னையில் அதிகமாக இருந்தது. வரும் நாட்களிலும் பனியின் தாக்கமும் இருக்கும் என வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
20 ஆம் தேதி மழைக்கு வாய்ப்பு பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகக்கூடும். 16-02-2026 முதல் 19-02-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20-02-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்,
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். 21-02-2026: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு 16-02-2026 முதல் 20-02-2026 வரை: வட தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். குறிப்பாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் 16 ஆம் தேதி அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 17 ஆம் தேதி அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 16-02-2026 மற்றும் 16-02-2026: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும். 17-02-2026 முதல் 19-02-2026 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு. சென்னையில் இன்று கிளைமேட் எப்படி? சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று (16-02-2026): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31-32° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 22-23° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.















