
புதுடெல்லி: பிப்ரவரி 16-
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் அமெரிக்க தொழிலதிபர் ஜெப்ரி எப்ஸ்டீன். இவர் 2019 ஜூலை மாதம் நியூயார்க் சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில், அவர் சேகரித்து வைத்திருந்த லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் நீதிமன்ற உத்தரவின்படி பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன. அதில், அதிபர் ட்ரம்ப், பில் கேட்ஸ், எலான் மஸ்க், தொழிலதிபர் அனில் அம்பானி உள்ளிட்ட பலரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி நேற்று தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது: கடந்த 2010ம் ஆண்டில் இன்டர் நேஷனல் அவார்ட்ஸ் கேலா என்ற பெயரில் விழா நடந்தது. அதில் காங்கிரஸ் மூத்த தலைவரும், அப்போது மத்திய அமைச்சராகவும் இருந்த கபில் சிபலுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவுக்கு நிதியுதவி செய்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன்.
அந்தக் காலகட்டத்துக்குப் பிறகு, அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான அரசில் பல கொள்கை மாற்றங்கள் காணப்பட்டன. இவை தற்செயலான நிகழ்வுகளா அல்லது எப்ஸ்டீனின் வெளிப்புற செல்வாக்கு காங்கிரஸ் அரசின் முடிவுகளை வடிவமைக்க முயன்றதா என்பதற்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தான் பதிலளிக்க வேண்டும். ஏனெனில் கபில் சிபல், காந்தி குடும்பத்துக்கு நெருக்கமானவர். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
இதுகுறித்து கபில் சிபல் கூறும்போது, “பாஜகவினர் என் மீது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளனர். இதில் எந்த உண்மையும் இல்லை” என்றார்.
2022-ல் காங்கிரஸில் இருந்து வெளியேறிய கபில் சிபல் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக சுயேச்சையாக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் சமாஜ் வாதி கட்சியின் ஆதரவில் அவர் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.















