நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம்

புதுடெல்லி: பிப்ரவரி 16-
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளநம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மார்ச் 9-ம் தேதி விவாதம் மற்றும் வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் முதல்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன.28-ம் தேதி தொடங்கி, பிப்.13-ம் தேதி வரை நடைபெற்றது. 2-வது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மார்ச் 9-ம் தேதி தொடங்கி ஏப்.2-ம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில், டெல்லியில் நாடாளுமன்ற விவகாரத் துறைஅமைச்சர் கிரண் ரிஜிஜு நேற்று கூறியதாவது: மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளன. அதன்மீது மார்ச் 9-ம் தேதி விவாதம் நடைபெறும். அதைத் தொடர்ந்து, வாக்கெடுப்பு நடத்தப்படும்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எதிர்க்கட்சியினர் பங்கேற்காவிட்டால், அவர்களுக்குத்தான் நஷ்டம். எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமை இல்லை. அவர்களுக்குள்ளேயே விரிசல் உள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் திரிணமூல் காங்கிரஸ்கட்சி கையெழுத்திடவில்லை. அவையை நடத்தவிடாமல் பிரதான கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபடுகின்றன. இதை பெரும்பாலான சிறிய கட்சிகள் விரும்பவில்லை. அவையில் மக்களின் பிரச்சினைகளைப் பற்றி மட்டுமே பேச வேண்டும் என்று சிறிய கட்சிகள் விரும்புகின்றன.2-வது கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 9-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த கூட்டத் தொடர் மிக சுவாரசியமாக இருக்கும். அதில் பல முக்கியமான மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளன. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையை நடத்த விடாமல் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டால், அது அவர்களுக்கே பாதகமாக முடியும். இவ்வாறு அவர் கூறினார்.