டெல்லியில் 5 நாள் ஏஐ உச்சி மாநாடு துவக்கம்: 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்பு

புதுடெல்லி: பிப்ரவரி 16-
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாட்டை டெல்லியில் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதில் ஐ.நா. பொதுச் செயலாளர் மற்றும் 20 நாடுகளின் தலைவர்கள், 50-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாடு கடந்த 2023-ம் ஆண்டில் பிரிட்டனின் பக்கிங்ஹாம் ஷயர் பிளெச்லி பூங்காவில் நடைபெற்றது. 2024-ல் தென்கொரிய தலைநகர் சியோலிலும், 2025-ல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலும் ஏஐ உச்சி மாநாடுகள் நடைபெற்றன. இதன் தொடர்ச்சியாக, இந்தியாவில் 4-வது செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு நடைபெறுகிறது.
தலைநகர் டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மாநாட்டை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இந்த உச்சி மாநாடு 5 நாட்கள் நடைபெறுகிறது. ஐ.நா. சபை பொதுச் செயலாளர் அந்தோணியோ குத்தேரஸ், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன், இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயக்க, பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே, பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸ், சுவிட்சர்லாந்து அதிபர் கை பார்மெலின், கிரீஸ் பிரதமர் கைரியாகோஸ் மிட்சோடாகிஸ், பின்லாந்து பிரதமர் பெட்டெரி ஓர்போ, நெதர்லாந்து பிரதமர் டிக் ஸ்கூப், குரேசியா பிரதமர் ஆண்ட்ரேஜ், கஜகஸ்தான் பிரதமர் ஓல்ஜாஸ் பெக்டெனாவ், ஸ்லோவாக்கியா அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி, எஸ்டோனியா அதிபர் அலார் கரிஸ், ஐக்கிய அரபு அமீரகத்தின் சார்பில் அபுதாபி பட்டத்து இளவரசர் காலித் பின் முகமது அல்நயான், பொலிவியா துணை அதிபர்எட்மண்ட் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மொரீஷியஸ் பிரதமர் நவின்சந்திர ராம்கூலம், செஷல்ஸ் துணை அதிபர் செபாஸ்டியன் பிள்ளை, கயானா துணை அதிபர் பரத் ஜக்தியோ உட்பட 20 நாடுகளின் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கின்றனர்.கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் தலைவர் பிராட் ஸ்மித், ஓபன் ஏஐ தலைமை செயல் அதிகாரி சாம் அல்ட்மேன், டீப் மைண்ட் தலைமை செயல் அதிபர் டெமிஸ் ஹசாபிஸ், மெட்டா தலைமை ஏஐ விஞ்ஞானி யான் லெகன், குவால்காம் தலைமை செயல் அதிகாரி கிறிஸ்டியானோ அமோன் உட்பட உலகின் 50 முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களின் சிஇஓக்களும் பங்கேற்கின்றனர். மக்கள், பூமி, வளர்ச்சி என்ற மையக் கருத்தின் அடிப்படையில் மாநாடு நடைபெறுகிறது. மனித வள மேம்பாடு, சமூக மேம்பாடு, பாதுகாப்பான ஏஐ தொழில்நுட்பம், அறிவியல் – ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு, ஏஐ ஆதாரங்கள் உள்ளிட்ட 7 பிரிவுகளில் 500-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைபெறுகின்றன. இதில்சுமார் 100 நாடுகளைச் சேர்ந்த3,500 ஏஐ தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.