
டெல்லி, பிப். 17- தமிழ்நாடு மட்டுமின்றி தேர்தல் நடக்கும் எல்லா மாநிலங்களிலுமே காங்கிரஸ் கட்சிக்குச் சிக்கல் வரிசைக்கட்டி நிற்கிறது. கேரளா, அசாம், மேற்கு வங்கம் என்று காங்கிரஸுக்கு திரும்பிய பக்கமெல்லாம் பிரச்சினைகள் தான் சூழ்ந்து நிற்கிறது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுவை என 5 மாநிலங்களில் விரைவில் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகளில் அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக இறங்கியுள்ளன. அதேநேரம் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமே பிரச்சாரத்திற்கு முன்பே மாநிலங்களில் பிரச்சினை வரிசைக்கட்டி நிற்கிறது.
கேரளா மன்மோகன் சிங் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த மணிசங்கர் ஐயர் கேரளத் தேர்தலில் இடதுசாரிகளே வெல்லும் என கூறியிருந்தார். காங்கிரஸ் வெல்ல வேண்டும் என்பது தனது விருப்பம் என்றாலும், பிரனாயி விஜயன் அரசு பல சாதனைகளைச் செய்துள்ளதால் பினராயி விஜயன் தொடர்ந்து மூன்றாவது முறையாக வெற்றி பெறுவார் என்று கூறிச் சலசலப்பை ஏற்படுத்தினார். மணிசங்கர் ஐயர் இப்போது காங்கிரஸில் இல்லை என்று தலைமை விளக்கம் கொடுத்தாலும் அங்குச் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. அதேபோல முதல்வர் வேட்பாளர் யார் என்பதிலும் குழப்பம் தொடர்கிறது. தற்போது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வி.டி. சத்தீசன், மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா, பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் ஆகியோர் பெயர்கள் இதில் அடிபடுகிறது. அங்குக் கோஷ்டி மோதலும் அதிகமாக இருப்பதால் இது காங்கிரஸ் வெற்றி வாய்ப்பைப் பாதிக்கலாம் எனத் தெரிகிறது. கேரளாவில் இப்போது காங்கிரஸ் வெல்லப் பிரகாசமாக வாய்ப்புகள் உள்ள நிலையில், அங்குக் காங்கிரஸ் கோஷ்டிப் பூசல் மிகப் பெரிய பிரச்சினையாகவே மாறியிருக்கிறது.

















