
மும்பை: பிப்ரவரி 17-
மும்பை கடல் பகுதியில் சட்டவிரோதமாக நின்று கொண்டிருந்த 3 எண்ணெய் கப்பல்களை இந்தியா பறிமுதல் செய்துள்ளது. ஈரானுடன் தொடர்புடைய மூன்று கப்பல்கள் தான் அவை என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியா – அமெரிக்கா இடையே வர்த்தக உறவு மீண்டும் மேம்பட்டுள்ள சூழலில், இந்த நடவடிக்கை முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்திய கடல்பரப்புகளில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெறுகிதா? என்பதை இந்திய கடற்படை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இந்த நிலையில்தான், அமெரிக்காவால் தடை செய்யப்பட்ட ஈரானுடன் தொடர்புடைய மூன்று எண்ணெய்க் கப்பல்களை இந்தியா பறிமுதல் செய்து இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 6 ஆம் தேதியே இது தொடர்பான தகவலை இந்திய அதிகாரிகள் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளனர். இருந்தாலும் பின்னர் அந்த பதிவு உடனடியாக அழிக்கப்பட்டது. எண்ணெய் கப்பல் எங்கிருந்து வருகிறது என்பதை மறைக்கும் விதமாக கப்பல்- டூ-கப்பல் (Ship-to-Ship) சரக்குகளை மாற்றும் முயற்சிகளுக்கு இந்திய கடல் எல்லைகள் பயன்படுத்தப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய இந்தியா விரும்புகிறது. 3 கப்பல்கள் சிறைப்பிடிப்பு இத்தகைய மாற்றங்கள் பல சமயங்களில் தடைகள் மீறுவதற்கும், சரக்குகள் எங்கிருந்து கொண்டு வரப்படுகின்றன என்பதை கண்காணிப்பதிலும் சிக்கலாக உள்ளது. எனவே இதுபோன்ற நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டுள்ளன. இதனால், இதுபோன்ற கப்பல் டூ கப்பல் சரக்குகளை மாற்றுவதை இந்தியா அனுமதிப்பது இல்லை. இந்த சூழலில் தான், ஈரானுடன் தொடர்புடைய மூன்று கப்பல்களை இந்தியா சிறைபிடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ‘ஸ்டெல்லர் ரூபி’, ‘ஆஸ்பால்ட் ஸ்டார்’ மற்றும் ‘அல் ஜாஃப்சியா’ என்ற மூன்று கப்பல்கள் கடலோர சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்க அடிக்கடி தங்களின் அடையாள விவரங்களை மாற்றியதாக தெரிகிறது. இதையடுத்தே மூன்று கப்பல்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

















