
ஜெய்ப்பூர்: பிப்ரவரி 17-
ராஜஸ்தானில் சட்டவிரோத பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் 8 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
ராஜஸ்தானின் அல்வார் மாவட்டம், பிவாடி தொழிற்பேட்டையில் மூடப்பட்ட ஒரு தொழிற்சாலையில் சட்ட விரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது. இங்குள்ள ஒரு கட்டிடத்தில் நேற்று காலையில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்த மற்ற கட்டிடங்களுக்கும் தீ வேகமாகப் பரவியது. இதில் மேலும் 3 முறை வெடி விபத்து ஏற்பட்டது.
விபத்தின் போது அந்த ஆலையில் சுமார் 25 தொழிலாளர்கள் இருந்ததாகவும் இவர்கள் பிஹார் மற்றும் உ.பி.யை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த விபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயம் அடைந்தனர். வெடி விபத்தை தொடர்ந்து அருகில் உள்ள ஆலைகளில் இருந்த தொழிலாளர்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். அப்பகுதியில் தற்காலிகமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
தீயை அணைக்கும் பணியில் 6 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்பு வீரர்கள் நீண்டநேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தொழிற்சாலை கட்டிடத்தை குத்தகைக்கு எடுத்தவர், அதன் உரிமையாளருக்கு தெரியாமல் அங்கு பட்டாசு தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
















