
ராய்ப்பூர்: பிப்ரவரி 18-
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா 2026-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் நாட்டில் நக்சல் தீவிரவாதத்தை முற்றிலும் அகற்ற இலக்கு நிர்ணயித்துள்ளார். இதில் குறிப்பிடத்தக்க வெற்றியை அரசு பெற்றுள்ளது.
கடந்த 2019-ல் சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் 61 மாவட்டங்களில் நக்சலைட் வன்முறை பதிவானது. இது இந்த ஆண்டு ஜனவரியில் சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்டில் 5 மாவட்டங்களாக சுருங்கியுள்ளது.சரண் அடையும் நக்சலைட்களுக்கான மறுவாழ்வு கொள்கையும் பலன் அளித்து வருவதால் நக்சலிஸம் இல்லாத நிலையை நோக்கி நாடு நகர்ந்து வருகிறது. இந்நிலையில் நக்சலைட்களுக்கு எதிரான போரில் தற்போது நக்சலைட் நினைவிடங்களை சிஆர்பிஎப் இடித்து அகற்றி வருகிறது.இந்த நினைவிடங்கள் பெரும்பாலும் உயிரிழந்த நக்சலைட் தலைவர்கள் மற்றும் கமாண்டர்களுக்காக கட்டப்பட்டவை. இதுகுறித்து சிஆர்பிஎப் வட்டாரங்கள் கூறுகையில், “நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து ராய்ப்பூரில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி மத்திய அமைச்சர் அமித் ஷா மறு ஆய்வு செய்தார்.அப்போது அவரது வழிகாட்டுதலுக்கு இணங்க சத்தீஸ்கரில் கடந்த 15 நாட்களில் சுக்மா, பிஜாப்பூர் மற்றும் பஸ்தார் முழுவதும் 53 நினைவிடங்களை சிஆர்பிஎப் இடித்து அகற்றியுள்ளது. உள்ளூர் மக்கள் உதவியுடன் பிப்ரவரி இறுதிக்குள் அனைத்து நினைவிடங்களையும் இடிக்க சிஆர்பிஎப் இலக்கு நிர்ணயித்துள்ளது.
மக்கள் மத்தியில் அச்சத்தை போக்கி நக்சல் போராட்டத்துக்கான அடையாளத்தை அழிக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்று தெரிவித்தன.















