கூட்டணி குறித்து பேசினால் நடவடிக்கை: காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: பிப்ரவரி 18-
திமுக – காங்கிரஸ் கூட்டணி குறித்து பொதுவெளியில் எவர் பேசினாலும் அவர்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளாக உள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் என்ற முறையில் இல்லாமல் சகோதரர்களாகவும், இரு குடும்பத்தினர் உறவினர்கள் போல பழகி வந்தனர்.
இந்தநிலையில், திடீரென ஆட்சியில் பங்கு வேண்டும் என்று காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாக்கூர் பேட்டி கொடுத்தார். இதனால் தொண்டர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்தநிலையில், காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நேற்று மாலை முகப்பேரில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்த இந்தக் கூட்டத்தில், கட்சியின் அகில இந்திய அமைப்பு பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார், தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர். சமீபத்தில் அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் சட்டமன்ற, நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள், அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் ஆகியோர் தங்களது கருத்துகளைத் தனிப்பட்ட முறையில் இக்கூட்டணி குறித்து தெரிவித்திருக்கிறார்கள்.