
சென்னை: பிப்ரவரி 18-
தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு (Low Pressure) பகுதி மேலும் வலுப்பெறக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் வரும் 20 ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. குறிப்பாக தென் தமிழகம், உள் தமிழகம், வட தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் காலை வேளையில் பனியின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மதிய நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இந்த சூழலில் தான் வரும் 20 ஆம் தேதி முதல் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 16 ஆம் தேதி பூமத்திய ரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடலின் மையப்பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு – வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து நேற்று (17-02-2026) காலை 08.30 மணி அளவில் பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்தியரேகைக்கு அருகிலுள்ள இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் 18 ஆம் தேதி வாக்கில் வலுப்பெறக்கூடும்.
18 முதல் 19 ஆம் தேதி வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 20-02-2026: கடலோர தமிழகம், தென் தமிழக உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
எச்சரிக்கை ஏதுமில்லை. மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என்று வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.













