
சென்னை: பிப்ரவரி 18-
பிரதமர் மோடி அடுத்த மாதம் இருமுறை தமிழகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். அதன்படி மார்ச் 1-ம் தேதி மதுரையிலும், 6-ம் தேதி வேலூரிலும் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் பாஜக தனது கூட்டணிக் கட்டமைப்பை வலுப்படுத்துவதிலும், புதிய கூட்டணிக் கட்சிகளை ஈர்ப்பதிலும் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், ஏற்கெனவே கடந்த மாதம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் (என்டிஏ) பொதுக்கூட்டத்தின் மூலம் பிரதமர் மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இதைத்தொடர்ந்து, அடுத்த மாதம் இருமுறை தமிழகத்தில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்கிறார். மார்ச் 1-ம் தேதி மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் கூட்டணியின் தற்போ தையத் தலைவர்களுடன், புதிதாக இணைய உள்ள கட்சித் தலைவர்களும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையைத் தொடர்ந்து, மார்ச் 6-ம் தேதி வேலூரில் நடைபெறும் பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றுகிறார். பிரதமரின் இந்தப் பயணங்களை ஒருங்கிணைக்க, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் மாநில அளவிலான சிறப்புக் குழுக்களை கட்சித் தலைமை அமைத்துள்ளது.
இதுகுறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடியின் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளை பொறுப்பேற்று வழிநடத்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தலைமையில் மாநில அளவில் குழு அமைக்கப்படுகிறது.
அந்த வகையில், மதுரை பயணத்துக்கு பொறுப்பாளர்களாக மாநில பொதுச் செயலாளர்கள் எம்.முருகானந்தம், ராம சீனிவாசன், பொன் வி.பாலகணபதி ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர்.
இதேபோல், வேலூர் சுற்றுப்பயண நிகழ்ச்சிக்கு பொறுப்பாளர்களாக மாநில துணை தலைவர் கரு.நாகராஜன், மாநில பொதுச் செயலாளர் கார்த்தியாயினி, மாநில செயலாளர் வெங்கடேசன் ஆகியோர் நியமிக்கப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள், கூட்டணிக் கட்சிகளுடனான ஆலோசனைகள் மற்றும் தொண்டர்களைத் திரட்டுவது போன்ற பணிகளை இந்தக்குழு தற்போது துரிதப்படுத்தி உள்ளது.













