மார்ச் 16 ராஜ்யசபா தேர்தல்

சென்னை: பிப்ரவரி 18-
2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதற்கு முன்னதாக மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ராஜ்யசபா எம்பி பதவிகளை குறிவைக்கும் கூட்டணிக் கட்சிகளால் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளுக்கும் புதிய சவால் ஏற்பட்டுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள வேளையில், தேமுதிக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் மாநிலங்களவை எம்பி பதவியை முக்கிய ஆயுதமாகக் கொண்டு கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகளுக்கு நெருக்கடி அளிக்க திட்டமிட்டுள்ளன.
தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளதால், அந்த இடங்களை யாருக்கு வழங்குவது என்ற கேள்வி தற்போது அரசியல் வட்டாரங்களில் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், என்.ஆர். இளங்கோ, டாக்டர் கனிமொழி சோமு ஆகியோரின் பதவிக் காலமும், அதிமுக சார்பில் தம்பிதுரை மற்றும் அதிமுக கோட்டாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜி.கே. வாசன் ஆகியோரின் பதவிக்காலமும் வரும் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடையும் நிலையில், மார்ச் 16ஆம் தேதி சட்டமன்றத்தில் உள்ள கட்சிகளின் பலத்தை அடிப்படையாகக் கொண்டால், இந்த ஆறு இடங்களில் நான்கு இடங்கள் திமுகவுக்கும், இரண்டு இடங்கள் அதிமுகவுக்கும் கிடைப்பது உறுதியானதாகக் கருதப்படுகிறது. ஆனால், இந்த கணக்கு எளிமையானதாக இருந்தாலும், கூட்டணி அரசியல் அதை சிக்கலாக்கியுள்ளது. காரணம், இந்த இடங்களை தங்களுக்காக ஒதுக்க வேண்டும் என கூட்டணிக் கட்சிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் தான்.
அதிமுக தரப்பில், பாமக தலைவர் அன்புமணிக்கு ஒரு மாநிலங்களவை இடம் வழங்குவதாக ஏற்கனவே உறுதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அதிமுகவுக்குக் கிடைக்கும் இரண்டு இடங்களில் ஒன்றே மீதமிருக்கும் நிலையில், அந்த ஒரே இடத்தை இன்னும் யாருக்கு வழங்குவது என்ற குழப்பம் உருவாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரன் தலைமையிலான அமமுகவும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனும் தங்களுக்கும் ஒரு மாநிலங்களவை இடம் வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவும், “கூட்டணிக்கு வரவேண்டும் என்றால் ஒரு மாநிலங்களவை எம்பி பதவி வழங்க வேண்டும்” என்ற நிபந்தனையுடன் அதிமுகவிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அதிமுக தலைமையிடம் கூட்டணி தொடர்பான அழுத்தம் அதிகரித்துள்ளது. மறுபுறம், திமுக தரப்பிலும் நிலைமை சிக்கலாக தான் உள்ளது. திமுகவுக்குக் கிடைக்கவுள்ள நான்கு மாநிலங்களவை இடங்களை யாருக்கு வழங்குவது என்பது பெரும் தலைவலியாக மாறியுள்ளது. திமுக அதிமுக அழுத்தம் ஏற்கனவே கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் மாநிலங்களவை பதவியை குறிவைத்து வருகின்றன. இதனுடன், பாமக நிறுவனர் ராமதாஸ் அல்லது தேமுதிக திமுக அணிக்கு வந்தால், அவர்களுக்கும் தலா ஒரு இடம் வழங்கப்படலாம் என்ற தகவல்களும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றன. ஒருபுறம் சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி உடன்பாடு, மறுபுறம் மாநிலங்களவை இடங்களுக்கான பங்கீடு என இரட்டை அழுத்தத்தை திமுகவும் அதிமுகவும் ஒரே நேரத்தில் சந்தித்து வருகின்றன. மாநிலங்களவை சீட் சட்டமன்ற தொகுதி வேண்டும், மாநிலங்களவை சீட்டும் வேண்டும் என்ற கூட்டணிக் கட்சிகளின் எதிர்பார்ப்புகள், இரண்டு பிரதான கட்சிகளையும் முடிவெடுக்க முடியாத சூழலுக்கு தள்ளியுள்ளது. இதனால், மாநிலங்களவை தேர்தல் என்பது இனி வெறும் மேலவை பதவிக்கான போட்டியாக இல்லாமல், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி அரசியலை தீர்மானிக்கும் முக்கிய கருவியாக மாறியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.