மீண்டும் மீண்டுமா.. மார்ச் மாதத்தில் 3 முறை தமிழ்நாடு வரும் மோடி.. பரபரக்கும் வியூகம்

சென்னை: பிப்ரவரி 19-
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. தேர்தலில் வெற்றி பெற திமுக, அதிமுக, நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகள் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறார்கள். தேசிய தலைவர்கள் முதல் மாநில தலைவர்கள் வரை தமிழ்நாடு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார்கள். மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. மார்ச் மாதத்தில் மட்டுமே பிரதமர் நரேந்திர மோடி 3 முறை தமிழ்நாடு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
2026 சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கடுமையாக முயற்சி செய்கிறது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற அதிமுக – பாஜக கூட்டணி முயற்சி செய்கிறது. நாம் தமிழர் மற்றும் தவெக கட்சிகளும் களத்தில் மல்லு கட்டுகிறார்கள். இதனால் களம் அனல் பறக்க தொடங்கியுள்ளது.
மோடி தமிழ்நாடு விசிட் பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டார். கடந்த வாரம் மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வந்திருந்தார். நேற்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் சென்னை ந்திருந்தார். அடுத்த வாரம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் தமிழ்நாடு வரவுள்ளார். அவரின் வருகைக்கு பிறகு மார்ச் முதல் வாரத்தில் தமிழ்நாடு தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு வருகிற மார்ச் மாதம் மட்டும் நரேந்திர மோடி 3 முறை தமிழ்நாடு வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே மாதத்தில் 3 முறை வருகிற மார்ச் 1 ஆம் தேதி மதுரையிலும், மார்ச் 7 ஆம் தேதி வேலூருக்கும் மற்றும் மார்ச் 11 ஆம் தேதி திருச்சி மற்றும் தஞ்சாவூருக்கும் மோடி வரவுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பாஜக கட்சிசெய்து வருகிறது. வேலூருக்கு மார்ச் 6 ஆம் தேதி செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், அது மார்ச் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மார்ச் 7 தேஜக பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. மார்ச் 1 ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் தரிசனம் செய்துவிட்டு கட்சி கூட்டத்தில் கலந்து கொள்கிறார். திருச்சி மற்றும் தஞ்சையிலும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் என்பதால் மார்ச் இறுதிக்குள் மோடி மேலும் சில முறை தமிழ்நாடு வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.