
புதுடெல்லி, பிப். 19 இந்தியாவில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு(ஏஐ) தாக்க உச்சி மாநாட்டில் முக்கிய உரை நிகழ்த்த இருந்த மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், அதனை ரத்து செய்துள்ளார்.இது தொடர்பாக கேட்ஸ் அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஏஐ உச்சி மாநாட்டின் முக்கிய முன்னுரிமைகளில் கவனம் செலுத்துவதற்காக பில் கேட்ஸ் தனது முக்கிய உரையை நிகழ்த்த மாட்டார். மிகவும் கவனமாக பரிசீலித்த பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், சுகாதாரம் மற்றும் மேம்பாட்டு இலக்குகளை முன்னேற்றுவதற்கான எங்கள் பணிகளை மேற்கொள்ள கேட்ஸ் அறக்கட்டளை முழுமையாக உறுதிபூண்டுள்ளது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில், கடந்த 16-ம் தேதி செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்க உச்சிமாநாடு தொடங்கியது. வரும் 20-ம் தேதி வரை இந்த மாநாடு நடைபெற உள்ளது. இதில், 110க்கும் மேற்பட்ட நாடுகள், 30 சர்வதேச நிறுவனங்கள், 45 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த மாநாட்டில் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் கலந்து கொண்டு முக்கிய உரை நிகழ்த்த இருந்தார். இந்நிலையில், அவர் தனது உரையை ரத்து செய்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்தவரும் நிதி ஆலோசகருமான மறைந்த ஜெப்ரி எப்ஸ்டீன் உடனான பில் கேட்ஸ்-ன் நட்புறவு தொடர்பான கோப்புகள் வெளிவந்த நிலையில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட வெளிப்படைத்தன்மை சட்டத்தின் கீழ் ஜெப்ரி எப்ஸ்டீன் வழக்கின் விசாரணை ஆவணங்களை, அந்நாட்டு நீதித் துறை கடந்த 19-ம் தேதி முதல் வெளியிடத் தொடங்கியது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக ஆயிரக்கணக்கான புகைப்படங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் விசாரணை அறிக்கைகள் பொதுவெளியில் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த ஆவணத் தொகுப்பில், பல முக்கிய பிரமுகர்களுக்கும் எப்ஸ்டீனுக்கும் இடையிலான மின்னஞ்சல்கள் இடம்பெற்றிருந்தன. அந்த ஆவணங்களில் இருந்த ஒரு மின்னஞ்சலில், பில் கேட்ஸ் திருமணத்திற்குப் புறம்பான உறவுகளில் ஈடுபட்டதாக எப்ஸ்டீன் குற்றம் சாட்டியிருந்தார். பில் கேட்ஸுடனான தனது உறவு குறித்த எப்ஸ்டீன் கோப்புகளில், “ரஷ்யப் பெண்களுடனான பாலியல் உறவின் விளைவுகளைச் சமாளிக்க பில் கேட்ஸுக்கு மருந்துகளைப் பெற்றுத் தருவது முதல், திருமணமான பெண்களுடன் அவர் சட்டவிரோதமாகச் சந்திப்புகளை நடத்துவதற்கு வசதி செய்து கொடுப்பது வரை இருந்தது” எனக் குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில் 9நியூஸ் ஆஸ்திரேலியா செய்தி நிறுவனத்துக்கு பில்கேட்ஸ் அளித்த நேர்காணலில், “எப்ஸ்டீனுடன் நான் செலவிட்ட ஒவ்வொரு நிமிடத்திற்காகவும் வருந்துகிறேன், அதற்காக மன்னிப்பு கோருகிறேன். இதுபோன்ற மின்னஞ்சல் ஒருபோதும் எனக்கு அனுப்பப்படவில்லை. அந்த மின்னஞ்சல் பொய்யானது. அப்போது அவருடைய எண்ணம் என்னவாக இருந்தது என்று எனக்குத் தெரியவில்லை. அவர் ஏதேனும் ஒரு வகையில் என்னை தாக்க முயற்சித்தாரா எனத் தெரியவில்லை.















