
மும்பை, பிப். 19- பிரிட்டனில் இருந்து வெளியேற அந்நாட்டு சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ளதால், எப்போது இந்தியா திரும்புவேன் என்று கூற முடியாது எனத் தொழிலதிபர் விஜய் மல்லையா மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். வங்கிகளில் ரூ.9,000 கோடிக்கும் அதிகமான கடன் பெற்று மோசடி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில், விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்காக அமலாக்கத் துறை எடுத்த நடவடிக்கையை எதிர்த்து மல்லையா தரப்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இந்தியச் சட்டத் திட்டங்களுக்கு கட்டுப்பட்டு இந்தியா திரும்பினால் மட்டுமே உங்கள் மனு பரிசீலிக்கப்படும். எப்போது இந்தியா திரும்புவீர்கள் என்பது குறித்து பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மல்லையா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய் கூறுகையில், “தொழிலதிபர் மல்லையாவின் இந்திய பாஸ்போர்ட் 2016-ம் ஆண்டு இந்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனால், அவரிடம் இப்போது இந்திய பாஸ்போர்ட் இல்லை. மேலும், மல்லையா இங்கிலாந்து மற்றும் வேல்ஸை விட்டு வெளியேறவோ அல்லது வெளியேற முயற்சிக்கவோ அல்லது எந்தவொரு சர்வதேச பயண ஆவணத்திற்கும் விண்ணப்பிக்கவோ அல்லது வைத்திருக்கவோ அனுமதிக்கப்படவில்லை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும், மனுதாரர் எப்போது இந்தியா திரும்புவார் என்பதை துல்லியமாகக் கூற முடியாது” என்று நீதிமன்றத்தில் மல்லையாவின் அறிக்கையை தேசாய் வாசித்தார். இதையடுத்து, மல்லையாவின் அறிக்கை குறித்து மத்திய அரசு தனது பதிலை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த மாதம் ஒத்திவைத்தனர்.















