
டெல்லி, பிப். 19- சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்து இருப்பது அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே பாகிஸ்தானுக்குச் செல்லும் ரவி நீரைத் தடுக்கும் நடவடிக்கை கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்தில் இருக்கிறது.
அணை கட்டுமானம் இறுதிக் கட்டத்தில் இருக்கும் சூழலில், கட்டுமானம் முடிந்த பாகிஸ்தானுக்கு செல்லும் ரவி நீர் முழுமையாகத் தடுக்கப்படும். பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தில் இருந்து இந்தியா விலகியது அனைவருக்கும் தெரியும். இதன் மூலம் சிந்து நீரை இந்தியா தனது தேவைக்கு ஏற்ப பயன்படுத்த முடியும். இருப்பினும்,
விலகல் அறிவிப்பு வெளியிடப்பட்ட போது பாகிஸ்தானுக்கு செல்லும் சிந்து நீரை தடுக்கும் உள்கட்டமைப்பு இந்தியாவிடம் இல்லை. இதனால் பாகிஸ்தானுக்கு நீர் போய்க் கொண்டு இருந்தது. புதிய அணை ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை. ரவி நதியின் குறுக்கே ஷாபூர் கண்டி அணையின் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கிறது. அணை செயல்பாட்டுக்கு வந்தவுடன், ரவி நதியிலிருந்து பாகிஸ்தானுக்கு உபரி நீர் பாய்வதை இந்தியா தடுக்க முடியும் என்று ஜம்மு-காஷ்மீர் அமைச்சர் ஜாவேத் அகமது ராணா தெரிவித்தார். ஷாபூர் கண்டி அணையின் பணிகள் மார்ச் 31ஆம் தேதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் கோடைக் காலத்தில் வறட்சியால் பாதிக்கப்படும் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களுக்கு ரவி நீர் திருப்பி விடப்படும்! இந்த ஷாபூர் அணையின் கட்டுமானம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு, 1979இல் தொடங்கப்பட்டது. ரவி நதியின் நீர் பாகிஸ்தானுக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கத்துடன் ஷாபூர் கண்டி அணைத் திட்டம் வகுக்கப்பட்டது. 1982இல், அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். இருப்பினும், பஞ்சாப் மற்றும் ஜம்மு-காஷ்மீர் அரசுகளுக்கு இடையேயான பிரச்சினைகளால் கட்டுமானம் தடைப்பட்டது. 2008ஆம் ஆண்டில், இத்திட்டம் ஒரு தேசியத் திட்டமாக அறிவிக்கப்பட்டது.
















