
டெல்லி: பிப். 20-
வங்கதேசத்தில் இப்போது தான் தேர்தல் நடந்து புதிய அரசு பதவியேற்றுள்ளது. இதனால் இந்தியா வங்கதேசம் இடையேயான உறவு மெல்லச் சீரடைய ஆரம்பிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே திடீரென இந்தியா விமான நிறுவனத்திற்கு வங்கதேசம் தனது வான்பரப்பைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது.
இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. வங்கதேசத்தில் ஹசீனா வீழ்ச்சிக்குப் பிறகு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசுதான் இருந்தது. அந்தக் காலகட்டத்தில் இந்தியா வங்கதேசம் இடையேயான உறவுகள் மிக மோசமாகச் சென்றது. பாகிஸ்தானுடன் நெருக்கம் காட்டிய யூனுஸ் அரசு, இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுத்தது.
திடீர் தடை இந்தச் சூழலில் தான் வங்கதேசத்திற்கு பொதுத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்த தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமராகச் சமீபத்தில் தான் பதவியேற்றர். அவரது வருகைக்குப் பிறகு, இந்தியா வங்கதேசம் இடையேயான உறவுகள் சீராகும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே யாரும் எதிர்பார்க்காத வகையில் இந்திய விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்திற்கு வங்கதேசம் தடை விதித்துள்ளது. வங்கதேசத்தின் ஏர் ஸ்பேஸ்ஸை பயன்படுத்த ஸ்பைஸ்ஜெட் விமானத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவின்படி வங்கதேசத்தின் மீது இனிமேல் ஸ்பைஸ்ஜெட் விமானங்களால் பறக்க முடியாது.
இது பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இது தொடர்பாக விளக்கங்களும் வந்துள்ளது. நிலுவைத் தொகை பாக்கி காரணமாகவே ஸ்பைஸ்ஜெட் விமானங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதாகவும் மற்ற இந்திய விமானங்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

















