
கொழும்பு: பிப்ரவரி 21-
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இன்று இரவு 7 மணிக்கு நியூஸிலாந்து – பாகிஸ்தான் அணிகள் கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெறுகிறது.
ஐசிசி ஆடவர் டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. 20 அணிகள் கலந்துகொண்டுள்ள இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ளன. லீக் சுற்றின் முடிவில் ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ‘பி’ பிரிவில் ஜிம்பாப்வே, இலங்கை, ‘சி’ பிரிவில் மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, ‘டி’ பிரிவில் தென் ஆப்பிரிக்கா, நியூஸிலாந்து அணிகள் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி இருந்தன. இந்த 8 அணிகளும் குரூப் 1, குரூப் 2 என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் குரூப் 1-ல் இந்தியா, ஜிம்பாப்வே, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் 2-ல் நியூஸிலாந்து, பாகிஸ்தான், இங்கிலாந்து, இலங்கை ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெற்றுள்ள அணி தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். புள்ளிகள் அடிப்படையில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும். இந்நிலையில் சூப்பர் 8 சுற்று இன்று தொடங்குகிறது. இதன் முதல் ஆட்டத்தில் இரவு 7 மணிக்கு கொழும்பு நகரில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 2009-ம் ஆண்டு சாம்பியனான பாகிஸ்தான், நியூஸிலாந்துடன் மோதுகிறது. மிட்செல் சாண்ட்னர் தலைமையிலான நியூஸிலாந்து அணி லீக் சுற்றில் 3 வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்திருந்தது.
தென் ஆப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்த அந்த அணி, ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கனடா ஆகிய அணிகளை வீழ்த்தியிருந்தது. டாப் ஆர்டரில் டிம் ஷெய்பர்ட், ஃபின் ஆலன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். இந்த வகையில் இவர்கள் நக்குல் பால், வேகம் குறைந்த பவுன்சர் மற்றும் லெக் கட்டர்களை பாகிஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு எதிராக பயன்படுத்தி அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். சுழற்பந்து வீச்சில் மிட்செல் சாண்ட்னர், இஷ் சோதி பலம் சேர்க்கக்கூடும். இவர்களுக்கு பகுதி நேர சுழற்பந்து வீச்சாளர்களான ரச்சின் ரவீந்திரா, கிளென் பிலிப்ஸ் உறுதுணையாக இருக்கக்கூடும்.
சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் ஆட்டங்களில் நமீபியா, நெதர்லாந்து, அமெரிக்கா ஆகிய அணிகளை வீழ்த்திய நிலையில் இந்தியாவிடம் தோல்வி கண்டிருந்தது. அந்த அணி தனது லீக் ஆட்டங்களை முழுமையாக இலங்கையில் விளையாடி உள்ளதால் ஆடுகளத்தின் தன்மையை நன்கு அறிந்திருக்கக்கூடும்.
இந்த வகையில் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக சுழற்பந்து வீச்சாளர்கள், மந்தமான ஆடுகளத்தில் திறம்பட செயல்பட தேவையான வேகம் மற்றும் நீளத்தை அறிந்துவைத்துள்ளனர். இது சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.


















