
பாட்னா: பிப்ரவரி 21
பிஹார் மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ மைதிலி தாக்கூர்(25). நாட்டின் மிக இளம் வயது எம்எல்ஏ இவர்தான். இவர் பிஹார் சட்டப்பேரவையில் நேற்று பேசியதாவது:
2005-ம் ஆண்டுக்கு முன்பு இருந்த காலத்தை நான் நினைத்து பார்க்கும்போதெல்லாம், மகாபாரதத்தில் அஸ்தினாபுரத்தை மன்னர் திருதராஷ்டிரர் ஆண்டதுதான் ஞாபகத்துக்கு வருகிறது. மன்னருக்கு பார்வையில்லை. அதனால் அவர் எதையும் பார்க்க விரும்பவில்லை.
அவருக்கு ஹஸ்தினாபுரத்தை பற்றி கவலையில்லை. அவருக்கு மகன் துரியோதனன் மட்டுமே முக்கியம். பிஹார் மாநிலம் 20 ஆண்டுகளுக்கு முன்பு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. அதனால் பல தலைமுறையினர் இன்னும் கஷ்டப்படுகின்றனர். அப்போது ஆட்சியில் இருந்தவர்கள் கண்களையும், காதுகளையும் கட்டிக் கொண்டனர். பிஹாரில் மாலை 6 மணிக்கு மேல் வெளியே சென்றால் ஆபத்து என மக்கள் கூறுவார்கள்.
ஆனால் இன்று அதிகாலை 3 மணிக்கு தர்பங்காவிலிருந்து புறப்பட்டு பாட்னாவில் எனது வீட்டுக்கு நான் பாதுகாப்பாக செல்கிறேன்.
இந்த மாற்றம் முதல்வர் நிதிஷ் குமாரின் சிறந்த நிர்வாகத்தால் ஏற்பட்டுள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் கடந்த 2006-ம் ஆண்டு 9-ம் வகுப்பு மாணவிகளுக்கு சைக்கிள் வாங்க நிதி அளிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அதன்பின்புதான் எனது மதுபானி கிராமத்தில் பெண் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல தொடங்கினர்.
பிஹாரின் புதல்வி உண்மையை எடுத்துக் கூறினால், எதிர்க்கட்சியினர் கூச்சலிடுகிறார்கள். இவ்வாறு மைதிலி தாக்கூர் பேசினார்.















