
சென்னை: பிப்ரவரி 21
வியாசர்பாடியில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரகதாம்பாள் உடனுறை இரவீஸ்வரர் கோயில் உள்ளது. சோழர் காலத்துக் கட்டிடக்கலைக்கும் ஆன்மிகச் சிறப்புக்கும் இக்கோயில் ஒரு சான்றாக விளங்கி வருகிறது பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, இந்து சமய அறநிலைய துறை சார்பில் நவீன ‘ஜாக்கி’ தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி, ஒட்டுமொத்தக் கோயிலையும் தரைமட்டத்துக்கு உயர்த்திப் பலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அதேநேரத்தில் கோயில் புனரமைப்புப் பணிகளும், புதிய கட்டுமானப் பணிகளும் நடைபெற்று வந்தன. இந்நிலையில், இப்பணிகள் அனைத்தும் நிறைவுற்ற நிலையில், நாளை (பிப்.22) மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அந்த வகையில், கும்பாபிஷேக விழா கடந்த 16-ம் தேதி கணபதி பிரார்த்தனை, தேவதா அனுக்ஞை, யஜமான சங்கல்பத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, கோ பூஜை, மகா கணபதி ஹோமம், தன பூஜை, நவகிரக ஹோமம், அங்குரார்ப்பணம், ரஷா பந்தனம், சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், ஆச்சார்ய வர்ணம், கும்பாலங்காரம், கலாகர்ஷணம், கலச புறப்பாடு மற்றும் முதல் கால பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து, நேற்று காலை விஷேச சந்தி, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை நடைபெற்றது.
இதையடுத்து, இன்று (21-ம் தேதி) நான்காம் கால பூஜை, பூர்ணா ஹூதி, ஐந்தாம் கால பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வான மகா கும்பாபிஷேகம் பிப். 22-ம் தேதி (நாளை) நடைபெறுகிறது. நாளை காலை 5 மணிக்கு ஆறாம் கால பூஜை, அவப்ருத யாகம், பரிவார யாக சாலை பூர்ணாஹுதி, ப்ரதான யாகசாலை, மஹா பூர்ணாஹுதி கலச புறப்பாடு நடைபெறுகிறது.
இதையடுத்து, நாளை காலை 8.30 மணிக்கு ராஜகோபுரம் அனைத்து விமானங்களுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், காலை 9 மணிக்கு மூலவர் சுவாமி அம்பாள் மகா கும் பாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து, மாலை 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், அதனை தொடர்ந்து 9 மணிக்கு பஞ்சமூர்த்தி திருவீதி உலாவும் நடைபெறுகிறது. கோயில் கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை, கோயில் செயல் அலுவலர் மா.ஆச்சி சிவப்பிரகாசம், மேலாளர் சு.தனசேகர் உள்ளிட்ட கோயில் அலுவலர்கள் முன்னின்று மேற்கொண்டு வருகின்றனர்.


















