
சென்னை: பிப்ரவரி 21 –
மக்கள் அங்கீகரித்தால் மீண்டும் சட்டப்பேரவைக்கு வருவோம் என 16-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தொடரின் கடைசி நாளில் உறுப்பினர்கள் நெகிழ்ச்சியுடன் பேசினர்.தற்போதைய 16-வது சட்டப்பேரவையின் கடைசி கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்றுசட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் தங்கள் 5 ஆண்டு கால சட்டப்பேரவை பணி அனுபவங்களை உருக்கமாகவும் நெகிழ்ச்சியுடனும் பகிர்ந்துகொண்டனர்.செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்): தமிழகம் இதுவரை கண்டிராத பல திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்தியுள்ளார். நிதி நெருக்கடியைக் கூட சமாளித்து, தமிழகத்தை தலை நிமிரச் செய்துள்ளார். மருது சகோதரர்களாக, தமிழகத்தில் ஸ்டாலினும் மத்தியில் ராகுல் காந்தியும் எந்த சமரசமும் இன்றி மக்கள் நலனுக்காக போராடி வருகின்றனர்.
ஜி.கே.மணி (பாமக): தொகுதிக்கு நாங்கள் கேட்டதை முதல்வர் ஸ்டாலின் கொடுத்தார். கட்சி, கொள்கை வேறுபாடு இன்றி அனைவரையும் அரவணைத்து ஆட்சி நடத்தியுள்ளார். விவசாயிகளின் கடன், மகளிர் குழுவினர் கடன் மற்றும் கல்விக் கடன்களை தள்ளுபடி செய்வது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்..
சிந்தனை செல்வன் (விசிக): அண்ணா, கருணாநிதி ஆட்சிக்காலத்தில் இல்லாதவகையில் தற்போது உள்ள அதிக நெருக்கடிகளை இயல்பாக கடந்து வந்துள்ளார். அரசியல், பண்பாட்டு தளங்களில் தமிழகத்தை தலைநிமிரச் செய்துள்ளார்.
பெ.நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): மிகப்பெரிய ஜாம்பவான்கள் அமர்ந்த இந்த சட்டப்பேரவையில் பணியாற்றியதில் பெருமை. இந்தியாவில் மதச்சார்பின்மையை பாதுகாக்கக்கூடிய தலைவர் ஸ்டாலின். தனது திட்டங்கள் மூலம் இந்திய நாட்டுக்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறார். மக்கள் அங்கீகரித்தால் மீண்டும் இந்த பேரவைக்கு வருவோம்.டி.ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்): மகளிர் உரிமைத்தொகை திட்டம் சாத்தியமா என்று கேட்டார்கள். ஆனால், அதை சாத்தியமாக்கி சாதித்துக்காட்டியிருக்கிறார். மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டினாலும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் அடைந்திருக்கிறது. ஸ்டாலின் மீண்டும் முதல்வர் ஆவார்.சி.சதன் திருமலைகுமார் (மதிமுக): இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களுக்கும் முன்மாதிரி முதல்வராக திகழ்கிறார் ஸ்டாலின். விளம்புநிலை மக்களை தூக்கிவிட வேண்டும் என்றஎண்ணம் கொண்டவர்.















