ஆற்றுக்குள் கவிழ்ந்த பஸ்- 18 பேர் உயிரிழப்பு

காத்மண்டு : பிப்ரவரி 23-
நேபாளத்தில் கட்டுப்பாட்டை இழந்து, ஆற்றுக்குள் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் உயிரிழந்தனர். நேபாளத்தில் மேற்கு போகாராவில் இருந்து பிரிதிவி நெடுஞ்சாலை வழியாக அந்நாட்டின் தலைநகர் காத்மாண்டுவிற்குச் 44 பயணிகளுடன் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பைசி கெளடா பகுதியில் நள்ளிரவு 1.30 மணி அளவில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மத்திய மாவட்டமான தாடிங்கில் உள்ள திரிசூலி ஆற்றில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர், நீண்ட நேரம் போராடி மீட்பு பணி மேற்கொண்டனர்.
இந்த கோர விபத்தில் 2 வெளிநாட்டு பயணிகள் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 26 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேபாள ராணுவம் மற்றும் ஆயுதப்படை போலீசார் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். ஆற்றில் மூழ்கியவர்களை தேட சிறப்பு நீர்மூழ்கி வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். பேருந்து விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. நேபாளத்தில் சமீபத்திய ஆண்டுகளில் சாலை விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.