
பிரிஸ்பன், பிப். 24- ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை இந்திய மகளிர் அணி 2-1 என கைப்பற்றி கோப்பையை வென்றது.இந்நிலையில் டி20 தொடரை தொடர்ந்து இரு அணிகளும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகின்றன. இதன் முதல் ஆட்டம் இன்று காலை 9.20 மணிக்கு பிரிஸ்பன் மைதானத்தில் நடைபெறுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை அதிர்ச்சி அளிக்கும் வகையில் இந்திய அணி தோற்கடித்து இருந்தது. இந்த தோல்விக்கு தற்போதைய இருதரப்பு தொடரில் ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுக்க முயற்சிக்கக்கூடும். இந்தத் தொடருடன் ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திரமான கேப்டன் அலிசா ஹீலி ஓய்வு பெற உள்ளார். இந்திய அணியின் பேட்டிங்கில் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா ராவல், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஹர்மன்பிரீத் கவுர் ஆகியோர் வலுசேர்க்கக்கூடும். பந்துவீச்சில் ரேணுகா தாக்குர், சரணி, தீப்தி சர்மா உள்ளிட்டோர் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும்.


















