
டெல்லி: பிப்ரவரி 25-
தேர்தல் வாக்குறுதிகளில் இலவசங்களை அறிவிக்க தடை கோரும் மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று உச்சநீதிமன்றத்தில் இந்த விசாரணை நடைபெறுகிறது.
முன்னதாக கடந்த 19ம் தேதி தலைமை நீதிபதி சூர்யா காந்த் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு நடத்திய விசாரணையில், பணக்காரன் – ஏழை என்ற பாகுபாடுகூட இல்லாமல், கண்மூடித்தனமாக இலவசங்களை வாரி வழங்கும் மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் கண்டித்திருந்தது. தேர்தலைக் குறிவைத்து, பொது நிதியைப் பற்றி கவலைப்படாமல் அரசியல் நடத்துகிறீர்களா என கேள்வி எழுப்பியிருந்தது.
வருமானம் அதிகமாக இருக்கும் மாநிலமாக இருந்தாலும், விவேகமற்ற இலவசங்களை அளிப்பதை விட, நலத்திட்டங்களுக்கும் வளர்ச்சிக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியது. அதேபோல வருவாய் பற்றாக்குறையில் இயங்கும் மாநிலங்கள்கூட, இலவசங்களுக்கு நிதியைத் தாராளமாக செலவழிக்கின்றன என்று தலைமை நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். உண்மையான உதவி தேவைப்படுவோருக்கு மட்டும் நலத்திட்டங்கள் சென்று சேரும் வகையில் ஏதேனும் திட்டங்களை மாநில அரசு வைத்திருக்கிறதா? என்றும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது. யாருக்கு உதவ வேண்டும்? “சாலைகள், மருத்துவமனைகள், பள்ளிகள், மருத்துவக் கல்லூரிகள் போன்ற உள்கட்டமைப்பை மேம்படுத்தப் பணம் செலவிடுவது உங்கள் கடமை அல்லவா? ஆனால், அதற்குப் பதிலாக, நீங்கள் ஸ்கூட்டிகள் கொடுக்கிறீர்கள், தேர்தலின்போது உடைகள், உணவு விநியோகிக்கிறீர்கள். இந்த நாட்டில் என்ன நடக்கிறது?
எல்லோராலும் எல்லாவற்றையும் வாங்க முடியாது என்பதைப் புரிந்துகொள்கிறோம், அவர்களுக்கு அரசு உதவ வேண்டும். கல்வி கற்க முடியாத குழந்தைகள் இருக்கிறார்கள்; அவர்களுக்குக் கல்வி வழங்குவது அடிப்படை உரிமை. மேற்படிப்பு படிக்க வசதியில்லாத திறமையான குழந்தைகள் பலர் இருக்கிறார்கள்; அவர்களுக்கு அரசு உதவுவது பாராட்டுக்குரியது.
ஆனால், வசதி படைத்தவர்களுக்கு, அதாவது தேவையில்லாதவர்களுக்கு ஏன் இலவசங்களைக் கொடுக்க வேண்டும்? இலவசங்கள் ஏன் முதலில் அவர்களின் கைகளுக்கே செல்கின்றன? இந்தக் கொள்கைகளை மாநிலங்கள் மறுபரிசீலனை செய்ய இதுவே சரியான நேரம் இல்லையா?” என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்விகளை எழுப்பியிருந்தனர். வழக்கின் விவரம் மத்திய அரசு 2024-இல் கொண்டுவந்த மின்சாரத் திருத்தச் சட்டத்தின் விதி 23 என்பது மின்சாரக் கட்டணம் மற்றும் மானியங்களை முறைப்படுத்துவது தொடர்பானது. இந்த விதி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதாகவும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது.
மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் வாதிடுகையில், மின்சாரத்தை உற்பத்தி செய்ய அல்லது கொள்முதல் செய்ய ஆகும் செலவுக்கும், மக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் வருவாய்க்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருப்பதைச் சுட்டிக்காட்டினார். இருப்பினும் இந்த மாபெரும் நிதிச் சுமையைத் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொண்டு, பொதுமக்களுக்கு குறிப்பாக விவசாயிகளுக்கும், 100 யூனிட் இலவச மின்சாரம் பெறுபவர்களுக்கும் மானியமாக வழங்கி வருவதை விளக்கினார். மத்திய அரசின் மின்சாரத் திருத்தச் சட்டத்தின் விதி 23 அமலாக்கப்பட்டால், மானியம் வழங்க முடியாது என்பதே தமிழக அரசின் வாதம். இப்படி இருக்கையில்தான் இலவசங்களுக்கு எதிரான கருத்துக்களை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.















