
வாஷிங்டன்: பிப்ரவரி 26-
இந்தியா- பாகிஸ்தான் போரை நான் நிறுத்தாமல் இருந்திருந்தால், 3.5 கோடி மக்கள் இறந்திருப்பர் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்னிடம் தெரிவித்தார் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.
அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நேற்று முன்தினம் பேசியதாவது: அமெரிக்க அதிபராக எனது முதல் 10 மாதங்களில் 8 போர்களை முடிவுக்குக் கொண்டு வந்தேன். நான் தலையிடாமல் இருந்திருந்தால் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுதப் போர் ஏற்பட்டிருக்கும். போரை நிறுத்த நான் முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால் பாகிஸ்தானில் 3.5 கோடி மக்கள் இறந்திருப்பார்கள் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் என்னிடம் தெரிவித்தார்.
எனது நிர்வாகம் 9-வது போரை முடிவுக்குக் கொண்டு வர மிகவும் கடினமாக உழைத்து வருகிறது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடங்கிய தினத்தில் நான் அதிபராக இருந்திருந்தால் இது ஒருபோதும் நடந்திருக்காது. போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ், உயிருடன் உள்ள அல்லது இறந்த ஒவ்வொரு பிணைக் கைதியும் வீடு திரும்புவதை உறுதி செய்து வருகிறோம்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அமெரிக்கர்களுக்கு நாங்கள் பெருமையுடன் பாதுகாப்பை மீட்டெடுத்து வருகிறோம். எனது வரிவிதிப்பு அச்சுறுத்தல் காரணமாக தீர்த்து வைக்கப்பட்டு அமைதி நிலவுகிறது. இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார். இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக அதிபர் ட்ரம்ப் இதுவரை, சுமார் 80-க்கும் அதிகமான முறை தெரிவித்துவிட்டார்.
இருப்பினும், ட்ரம்பின் பேச்சை மத்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையேயான நேரடிப் பேச்சுவார்த்தை மூலமே போர் நிறுத்தப்பட்டதாக இந்திய அரசு விளக்கம் அளித்து வருகிறது. இருந்த போதும், இந்தியா – பாகிஸ்தான் போரை தானே நிறுத்தியதாக ட்ரம்ப் தொடர்ந்து பேசி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



















