
சென்னை: பிப்ரவரி 26-
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியுடன் இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 7 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறுகிறது.சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த ஆட்டத்தில் 88 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 18.5 ஓவர்களில் 111 ரன்களுக்கு சுருண்டிருந்தது. இந்த தோல்வியால் இந்திய அணியின் நிகர ரன் ரேட் -3.800 ஆக உள்ளது.இதனால் அரை இறுதிக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை பெற வேண்டுமானால் இந்திய அணி இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள 2 ஆட்டங்களிலும்
பெரிய அளவிலான வெற்றிகளை குவித்தாக வேண்டும் என்ற நெருக்கடியில் உள்ளது. டாப் ஆர்டரில் அபிஷேக் சர்மாவின் மோசமான பார்ம் அணியின் செயல் திறனை வெகுவாக பாதித்துள்ளது.அவர், 4 ஆட்டங்களில் 3-ல் டக் அவுட் ஆகியிருந்தார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 15 ரன்கள் சேர்த்திருந்தார். நடப்பு தொடரில் அபிஷேக் சர்மாவுடன் சராசரி 3.75 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 75 ஆகவும் உள்ளது. மந்தமான ஆடுகளம், பவர்பிளேவில் சுழற்பந்து வீச்சாளர்கள் வேகத்தை குறைத்து வீசுவது உள்ளிட்டவை அபிஷேக் சர்மாவுக்கு கடும் சவால்களை அளித்து வருகின்றன.
லீக் சுற்றில் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்ததால் அபிஷேக் சர்மா விரைவிலேயே ஆட்டமிழந்த போதிலும் அது பெரிய அளவில் அணியின் செயல் திறன் தாக்கத்தை ஏற்படுத்தாமல் இருந்தது.
ஆனால் சூப்பர் 8 சுற்றில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இஷான் கிஷன் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தது நெருக்கடியை உருவாக்கியது.
3-வது வீரராக களமிறங்கி வரும் திலக் வர்மாவிடம் இருந்தும் தொடர்ச்சியாக பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை.பந்துகளுக்கு நிகராக மட்டுமே ரன்கள் சேர்க்கும் அவர், சூழ்நிலைக்கு தகுந்தபடி தாக்குதல் ஆட்டம் மேற்கொள்ளாததும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. நடப்பு தொடரில் அவரது ஸ்டிரைக் ரேட் 118 ஆக இருக்கிறது. இது நவீனகால டி20 கிரிக்கெட்டில் பவர்பிளேவில் மிக குறைந்த ஸ்டிரைக் ரேட்டாக பார்க்கப்படுகிறது.



















