
டெல் அவிவ்: பிப்ரவரி 26-
‘‘தீவிரவாதத்தை எதுவும் நியாயப்படுத்த முடியாது ’’ என்று இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி திட்டவட்டமாகக் கூறினார்.பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று இஸ்ரேல் சென்றார். டெல் அவிவ் விமான நிலையத்தில் பிரதமர் மோடியை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கட்டியணைத்து உற்சாகமாக வரவேற்றார். அங்கு இரு நாட்டு தேசிய கீதங்களையும் ராணுவ பேண்ட் குழுவினர் இசைத்தனர். பின்னர், நாடாளுமன்றத்துக்கு இருவரும் சென்றனர்.
இஸ்ரேல் நாடாளுமன்றம் ‘நெசட்டில்’ பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அவர் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் நுழைந்த போது, மோடி.. மோடி என இஸ்ரேல் எம்.பி.க்கள் உற்சாகமாக கோஷம் எழுப்பி வரவேற்றனர்.
சகோதர நாடுகள்: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் நெதன்யாகு பேசுகையில், ‘‘இஸ்ரேலின் சிறந்த நட்பு நாடு இந்தியா. இந்தியாவும் இஸ்ரேலும் சகோதர நாடுகள். பிரதமர் மோடி இஸ்ரேல் வந்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியாவும் இஸ்ரேலும் தங்கள் உறவை வலுப்படுத்தி வருகின்றன. மோடியைக் கட்டிப்பிடித்து வரவேற்பது உண்மையிலேயே மிகச் சிறப்பானது. இரு நாடுகள் இடையேயான வர்த்தகம் இரு மடங்கு அதிகரித்துள்ளது. ஒத்துழைப்பு 3 மடங்கு அதிகரித்துள்ளது. புரிதல் 4 மடங்கு அதிகரித்துள்ளது. இஸ்ரேலுக்கு ஆதரவாக பிரதமர் மோடி உள்ளார். இந்தியாவும் இஸ்ரேலும் பல நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்கின்றன. யூதர்களுக்கு இந்தியாவில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்தியா சக்திவாய்ந்த நாடு’’ என்றார். இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: தீவிரவாதத்தை எதுவும் நியாயப்படுத்த முடியாது. அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் உங்கள் வேதனையை உணர்கிறேன். மும்பை தீவிரவாத தாக்குதலும், இஸ்ரேலில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதலும் ஒன்றுதான். பொதுமக்களை கொல்வதை நியாப்படுத்த முடியாது. தீவிரவாதம் அமைதியைக் கெடுக்கிறது. சமூகத்தை அழிப்பதுதான் தீவிரவாதத்தின் நோக்கம். தீவிரவாதத்தில் இரட்டை நிலை இருக்க முடியாது. தீவிரவாத விஷயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இந்தியா உள்ளது. இப்பகுதியில் நிலையான அமைதி நிலவ வேண்டும் என இந்தியா விரும்புகிறது.பாலஸ்தீன பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டிய நேரம் வந்துள்ளது. அமைதிக்கான பேச்சுவார்த்தையைத் தொடங்க வேண்டும் என இந்தியா வலியுறுத்துகிறது. இந்தியாவில் யூதர்கள் அச்சமின்றி வசிக்கின்றனர். இந்தியா யூதர்களின் தாய்நாடாக உள்ளது. நமது உறவு ரத்தம் மற்றும் தியாகத்தால் எழுதப்பட்டுள்ளது. தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை செயல்படுத்துவது குறித்து இந்தியாவும் – இஸ்ரேலும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

















