
சென்னை: பிப்ரவரி 26-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு காலமானார். இன்று மாலை முழு அரசு மரியாதைக்கு பிறகு, அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானம் வழங்கப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு. 101 வயதாகும் அவருக்கு சிறுநீரக கோளாறு, ரத்த அழுத்தம் மற்றும் உணவு விழுங்க முடியாத நிலை இருந்ததால் கடந்த 1-ம் தேதி சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவருக்கு பல்வேறு மருத்துவத் துறை நிபுணர்கள் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த 23-ம் தேதி அவரது உடல்நிலையில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை தொடர்ந்து நேற்று பகல் 1.55 மணிக்கு நல்லகண்ணு காலமானார்.
இதையடுத்து அவரது உடல் மாலை 5 மணிக்கு சென்னை தி.நகர் செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள், கட்சியினர், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்று பிற்பகல் 3 மணிக்கு பிறகு, நல்லகண்ணுவின் விருப்பப்படியே அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, சென்னை சென்ட்ரலில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரிக்கு (எம்எம்சி) – ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தானம் வழங்கப்படவுள்ளது. கடந்த டிசம்பர் 26-ம் தேதி நல்லகண்ணு தனது 101-வது பிறந்த நாளை கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நல்லகண்ணுவின் மறைவையொட்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் அடுத்த 7 நாட்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகங்களில் 3 நாட்களுக்கும் துக்கம் அனுசரிக்கும் விதமாக கட்சிக் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நல்லகண்ணுவின் மறைவுக்கு தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், “மதிப்புக்குரிய நல்லக்கண்ணுவின் மறைவு செய்தி கேட்டு ஆறாத் துயரமடைந்தேன். அவரது தியாகங்கள் நிறைந்த போராட்ட வாழ்வு மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி: மறைந்த நல்லகண்ணு, அடித்தட்டு மக்களுடனான தொடர்புக்காகவும், உரிமை மறுக்கப்பட்டோர், தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்காக குரல் கொடுக்கும் முயற்சிகளுக்காகவும் நினைவுகூரப்படுவார். சமூகத்தின் அனைத்துப் பிரிவு மக்களாலும் அவர் பெரிதும் மதிக்கப்பட்டார். அவரது எளிமையும் அதே அளவுக்கு குறிப்பிடத்தக்கது. எனது எண்ணங்கள் யாவும் அவரது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்களுடன் இருக்கும்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி: நல்லகண்ணுவின் வாழ்க்கை நேர்மை, எளிமை மற்றும் ஏழை, எளிய மக்களுக்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு ஓர் அரிய எடுத்துக்காட்டாகும். கிட்டத்தட்ட 9 தசாப்தங்களாக, அவர் நீதி மற்றும் கண்ணியத்துக்காக உறுதியுடன் நின்றார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.
முதல்வர் இரங்கல்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:
முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவுற்றார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்துக்கு ஆளாக்கியுள்ளது. நம் சம காலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி. நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாக பெருஞ்சீலர்.
நல்லகண்ணு மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும். மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டு சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும். பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லா தோழர் நல்லகண்ணுவின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும். தமிழகத்தின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.















