காங்கிரஸ் விஜயுடன் கைகோர்த்தால் என்ன செய்வது? திமுகவின் மெகா திட்டம்

டெல்லி, பிப். 26- விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (TVK) களத்திற்கு வந்த பிறகு, தமிழக அரசியல் களம் முன்பை விடப் பரபரப்பாகிவிட்டது. குறிப்பாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, விஜய்யுடன் கைகோர்க்கக்கூடும் என்ற பேச்சுக்கள் இப்போதே அறிவாலயத்தின் காதுகளை எட்டத் தொடங்கியுள்ளன. தமிழக சட்டமன்றத் தேர்தல் ஜுரம் தற்போதே உச்சத்தை எட்டியுள்ள நிலையில், அறிவாலயத்திற்கும் சத்தியமூர்த்தி பவனிற்கும் இடையிலான ‘உறவு’ இப்போது நூலில்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. “இனியும் பணிந்து போக முடியாது” என்கிற முடிவுக்கு வந்திருக்கிறது டெல்லி மேலிடம். பகிர்வு மோதல்: முட்டிக்கொள்ளும் முனைகள்! அடுத்த இரண்டு மாதங்களில் தேர்தல் வரவுள்ள நிலையில், காங்கிரஸின் கோரிக்கை மிகத் தெளிவானது: ‘ஆட்சி அதிகாரம்… அமைச்சரவையில் பங்கு’. கடந்த தேர்தல்களைப் போல் வெறும் ‘ஆட்சிக்கு ஆதரவு’ என்கிற பாலிசிக்கு இந்த முறை ராகுல் காந்தி முற்றுப்புள்ளி வைக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால், “தனிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி” என்பதில் ஸ்டாலின் பிடிவாதமாக இருக்க, கூட்டணிக்குள் புகைச்சல் ஆரம்பமாகிவிட்டது.பல கட்டப் மறைமுக பேச்சுவார்த்தைகள் நடத்தியும், திமுக தரப்பில் ‘பவர் ஷேரிங்’ குறித்து எந்த உறுதியான பதிலும் வராததால், காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தியில் இருக்கிறது. ஒருவேளை ‘கை’ சின்னம் கழன்று கொண்டால், முதலமைச்சர் ஸ்டாலினின் ‘பிளான் பி’ என்னவாக இருக்கும்? காங்கிரஸ் வெளியேறினால், திமுகவுக்குப் பெரிய தலைவலி குறையும் என்றுதான் அறிவாலயத்தின் ‘உடன்பிறப்புகள்’ நினைக்கிறார்கள். பொதுவாக 30 முதல் 40 இடங்களை காங்கிரஸுக்காக திமுக ஒதுக்கும். அந்த இடங்கள் மிச்சமானால், திமுக சுமார் 200 தொகுதிகளில் நேரடியாக ‘உதயசூரியன்’ சின்னத்தில் போட்டியிடத் திட்டமிடும். கூட்டணிக் கட்சிகளின் தயவின்றி 118 என்ற மேஜிக் நம்பரைத் தாண்டி, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடிக்க இதுதான் சரியான வழி என திமுக ஒருபக்கம் கணக்கு போடுகிறது.