
சென்னை: பிப்ரவரி 27-
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று சென்னையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரிடம் அரசியல்கட்சிப் பிரதிநிதிகள் வலியுறுத்தி உள்ளனர்.தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. தேர்தலை நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் நடத்துவதற்கான ஆலோசனைகளைப் பெறும் வகையில் தமிழகத்தில் உள்ள 12 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்தது. அதன்படி, தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் சென்னையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தேசியக் கட்சிகளான பாஜக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, தேசிய மக்கள்கட்சி மற்றும் மாநிலக் கட்சிகளான திமுக, அதிமுக, தேமுதிக, விசிக,நாதக ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று, பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணுவின் இறுதி அஞ்சலி நிகழ்வுக்குச் சென்றதால் அக்கட்சி சார்பில் யாரும் பங்கேற்கவில்லை. அக்கட்சியின் கருத்துகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதையே அனைத்துக் கட்சியினரும் வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள், ஐ.ஜி.க்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
காவல் துறை முக்கிய அதிகாரிகள், புகாரில் சிக்கியுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரிகளை மாற்ற வேண்டும். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், பள்ளி தேர்வு, பண்டிகை போன்றவற்றை கணக்கில் கொண்டுதான் தேர்தல் நடத்தப்படும் என்றும் தலைமை ஆணையர் தெரிவித்துள்ளார்.















