ஆப்கன் போர் தீவிரமடையும் சூழலில் பாகிஸ்தானை பாராட்டிய டொனால்டு ட்ரம்ப்!

வாஷிங்டன், பிப். 28- பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையிலான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பாகிஸ்தான் பிரதமர், ராணுவத் தளபதியை பாராட்டியுள்ளது பரபரப்பை உருவாக்கியுள்ளது. பாகிஸ்தான் – ஆப்கன் இடையிலான போரில் தலையிடுவீர்களா என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டொனால்டு ட்ரம்ப், “நான் தலையிடுவது குறித்து பரிசீலிப்பேன். ஆனால் நான் பாகிஸ்தானுடன் நன்றாகப் பழகுகிறேன். அவர்களுக்கு ஒரு சிறந்த பிரதமர், ஒரு சிறந்த ராணுவத் தலைவர் உள்ளனர். பாகிஸ்தானில் நான் மிகவும் மதிக்கும் இரண்டு பேர் தலைவர்களாக உள்ளனர். பாகிஸ்தான் மிகவும் சிறப்பாக செயல்படுகிறது” என்று ட்ரம்ப் கூறினார். அமெரிக்க வெளியுறவுத்துறையும் பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதாக சமிக்ஞை செய்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையிலான சமீபத்திய மோதலில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்க பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் அம்னா பலோச்சுடன் பேசியதாக அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் அலிசன் எம் ஹூக்கர் கூறினார். அவர், “நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். மேலும் தலிபான் தாக்குதல்களுக்கு எதிராக தன்னை பாதுகாத்துக் கொள்ளும் பாகிஸ்தானின் உரிமைக்கு ஆதரவை வெளிப்படுத்தினோம்” என்று ஹூக்கர் கூறினார். இதற்கிடையில், பாகிஸ்தானில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு அமெரிக்கா பயண எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பொது இடங்களுக்கு பயணம் செய்யும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.