
ஹூப்ளி, பிப். 28- ரஞ்சி கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் கர்நாடகா – ஜம்மு & காஷ்மீர் அணிகள் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் விளையாடி வருகின்றன. இதன் முதல் இன்னிங்ஸில் ஜம்மு & காஷ்மீர் அணி 584 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஷுபம் பண்டிர் 121, சஹில் லாட்ரா 72, கேப்டன் பராஸ் டோக்ரா 70, கன்ஹையா வாதவன் 70, அப்துல் சமத் 61 ரன்கள் சேர்த்தனர். இதையடுத்து பேட் செய்த கர்நாடகா அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 69 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 130, கிருத்திக் கிருஷ்ணா 27 ரன்களுடன் களத்தில் இருந்தனர். நேற்று 4-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய கர்நாடக அணி 93.3 ஓவர்களில் 293 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மயங்க் அகர்வால் 160, கிருத்திக் கிருஷ்ணா 36, வித்யாதர் பாட்டீல் 11, ஷிகர் ஷெட்டி 0, பிரசித் கிருஷ்ணா 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஜம்மு & காஷ்மீர் அணி சார்பில் அகிப் நபி 5 விக்கெட்களை வீழ்த்தினார். சுனில் குமார், யுத்விர் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். 291 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்ஸை விளையாடிய ஜம்மு & காஷ்மீர் அணி 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 57 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது.


















